“நாடாளுமன்றத்தின் நேரத்தை வீணடித்துவிட்டார் மோடி” - மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்


நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவரின் உரை மீதான விவாதத்தில், காங்கிரஸ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்காமல் நாடாளுமன்றத்தின் நேரத்தை பிரதமர் மோடி வீணடித்துவிட்டதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்திருக்கிறார்.

இதுதொடர்பாக, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், “பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளின் பிரச்சினை, பொருளாதாரம், தேசப் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமை எனப் பல்வேறு பிரச்சினைகளின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி கேள்விகளை எழுப்பியது. ஆனால், எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டிய பிரச்சினைகள் தொடர்பாகப் பேசாமல், காங்கிரஸ் மீது அவதூறு கருத்துகளைப் பேசுவதிலேயே பிரதமர் மோடி ஈடுபட்டிருந்தார்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

“பற்றி எரியும் பிரச்சினைகள் குறித்து மாநிலங்களவையில் கேள்விகள் எழுப்பப்பட்டபோது பிரதமர் மோடி அவையில்தான் இருந்தார். எனினும், நாங்கள் எழுப்பிய ஏராளமான கேள்விகளுக்கு எங்களுக்கு விடை கிடைக்கவில்லை” என்று கூறியிருக்கும் அவர், “எதிர்க்கட்சிகள் எழுப்பிய பிரச்சினைகளைத் திசைதிருப்பவே பிரதமர் மோடி முயன்றார். அவர் தேர்தல் பிரச்சாரத்தில் என்ன பேசுவாரோ அதையே அவையிலும் பேசினார்” என்றும் விமர்சித்தார்.

ஹிஜாப் தொடர்பான சர்ச்சை குறித்து பேசிய மல்லிகார்ஜுன கார்கே அதற்கு பாஜகவினர்தான் காரணம் என்று குறிப்பிட்டார். “கர்நாடகத்தில் என்ன நடந்தாலும் அதற்கு அரசு, குறிப்பாக பாஜகவினர் தான் பொறுப்பு. தேர்தல் நடக்கும் நேரம் என்பதால் அந்தப் பிரச்சினை மூலம் ஆதாயம் தேட பாஜக விரும்புகிறது” என்று அவர் கூறினார்.

x