ஆசிஷ் மிஸ்ரா அத்தனை எளிதில் வெளிவர முடியுமா?


ஆசிஷ் மிஸ்ரா (நடுவில் இருப்பவர்)

உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் கார் மோதி விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட மத்திய உள் துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.

2021 அக்டோபர் 3-ல், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் பேரணியாகச் சென்றபோது நடந்த அந்தச் சம்பவம் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த வன்முறைச் சம்பவங்களில் விவசாயிகள், பாஜகவினர், ஒரு பத்திரிகையாளர் என 8 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரில் முக்கியமானவரான ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது பரபரப்பாகப் பேசப்பட்டது.

நேற்று உத்தர பிரதேசத்தின் உத்தர பிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள பிலாஸ்பூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஆசிஷ் மிஸ்ரா பற்றிப் பேசிய பிரியங்கா, “அந்த மனிதர் ஜாமீன் பெற்றுவிட்டார், உங்களை (விவசாயிகளை) நசுக்கித் தள்ளிய அவர் விரைவில் சுதந்திரமாக உலவப்போகிறார். இந்த அரசு யாரைக் காப்பாற்றியது? அது விவசாயிகளைக் காப்பாற்றியதா? விவசாயிகள் கொல்லப்பட்டபோது காவல் துறையும் அரசு நிர்வாகமும் எங்கு இருந்தன?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

வெளிவருவதில் என்ன சிக்கல்?

எனினும், அத்தனை எளிதில் ஆசிஷ் மிஸ்ரா வெளிவந்துவிட முடியாது என்றே தெரிகிறது.

லக்கிம்பூர் போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், இந்திய தண்டனைச் சட்டம் 147, 148, 149, 302, 307, 326, 34, 427 மற்றும் 120பி பிரிவுகளின் கீழ் ஆசிஷ் கைதுசெய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கூடுதலாக, ஆயுதச் சட்டப் பிரிவுகளின் கீழும் அவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கியிருக்கும் அலகாபாத் உயர் நீதிமன்றம், 302 மற்றும் 120 பி சட்டப்பிரிவுகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. 302-வது சட்டப்பிரிவு கொலைக்குற்றம் தொடர்பானது. 120பி சட்டப்பிரிவு குற்றவியல் சதி தொடர்பானது.

இந்த இரு பிரிவுகளும், ஆசிஷ் மிஸ்ராவுக்கான ஜாமீன் ஆணையில் குறிப்பிடப்படவில்லை என்பதால், அவர் சிறையிலிருந்து வெளிவருவது கடினம் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள். மேற்கண்ட இரு பிரிவுகளின்கீழ் தொடரப்பட்ட வழக்குகளிலிருந்தும் ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

x