விஜய் மல்லையா ஆஜராக கடைசி வாய்ப்பளித்த உச்ச நீதிமன்றம்!


விஜய் மல்லையா

தண்டனைக்குரிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள விஜய் மல்லையா, நீதிமன்றத்தில் ஆஜராக கடைசி வாய்ப்பினை வழங்குவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பல்லாயிரம் கோடி வங்கிக்கடன் மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா, நாட்டைவிட்டு வெளியேறி இந்திய விசாரணை மற்றும் நீதி அமைப்புகளுக்கு போக்கு காட்டி வருகிறார்.

நாட்டைவிட்டு வெளியேறிய விஜய் மல்லையா பணப்பரிவர்த்தனையில் ஈடுபடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனை பொருட்படுத்தாத அவர் 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை தனிப்பட்ட செலவினங்களின் பெயரில் பரிவர்த்தனை செய்தார். இது தொடர்பாக மல்லையாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் முடிவில் விஜய் மல்லையாவை குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம், தண்டனை விவரங்களை அறிவிக்காது ஒத்திவைத்தது. தண்டனை விவரங்களை அறிவிக்கும் முன்னர் குற்றவாளியின் கருத்துக்களை கேட்டறிய நீதிமன்றம் விரும்பியது.

இது தொடர்பாக பலமுறை அவகாசம் அளித்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாது, ஆண்டுக்கணக்கில் விஜய் மல்லையா இழுத்தடித்து வருகிறார். இதனையடுத்து, அவருக்கு மேலும் 2 வாரம் அவகாசம் அளித்த உச்ச நீதிமன்றம், இம்முறை ஆஜராகாவிடில் விஜய் மல்லையா இன்றியே தண்டனை விவரங்கள் வெளியிடப்படும் என உத்தரவிட்டுள்ளது. இதுவே கடைசி வாய்ப்பு என்றும் அறிவித்துள்ள உச்ச நீதிமன்றம், விஜய் மல்லையாவுக்கு எதிரான இந்த வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தது.

x