ஹிஜாப் மற்றும் காவிக்கு தடை: கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!


கர்நாடக மாநிலத்தின் பள்ளி மற்றும் கல்லூரிகளில், ஹிஜாப் மற்றும் காவி துண்டு ஆகியவற்றை அணிந்து வருவதற்கு தடை விதித்து, உயர் நீதிமன்ற அமர்வு இடைக்கால உத்தரவு வழங்கியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் மேல்நிலைப் பள்ளி ஒன்றில், ஒரே சீருடை என்பதை முன்னிறுத்தி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு நிர்வாகம் தடை விதித்தது. மற்றும் சில கல்லூரிகளில் மத அடையாளம் என்ற பெயரில் ஹிஜாப் அணிந்து வரும் மாணவர்களுக்கு சக மாணவ மாணவியர் எதிர்ப்பு தெரிவித்தனர். இஸ்லாமிய மாணவிகளின் ஹிஜாப்புக்கு எதிராக இந்து மாணவ மாணவியர் காவி துண்டு அணிந்து கல்வி நிலையங்களுக்கு வந்தனர். கல்வி நிலைய வளாகத்தினுள் எழுந்த பிரச்சினை, ஒரு சில அரசியல் தலையீடுகள் காரணமாக, கல்வி நிலையங்களுக்கு வெளியேயும் வெடித்தது.

சமூக மற்றும் அரசியல் மோதல்களை தவிர்க்க, கல்வி நிலையங்களுக்கு விடுமுறை, 144 தடை ஆகியவற்றை காவல்துறை விதித்தது. இந்த பிரச்சினை தொடர்பாக, ஹிஜாப் உரிமை கோரும் மாணவிகள் சார்பிலான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. நீதிபதி கிருஷ்ண தீட்சித், வழக்கினை விரிவான அமர்வு விசாரிக்கும் என அறிவித்தார். அதன்படி அவர் உட்பட ரிது ராஜ் அவஸ்தி, காஸி ஜெய்புனிஷா முகைதின் என 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் இன்று(பிப்.10) வழக்கின் விசாரணை தொடங்கியது.

கல்வி நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட இருப்பதால், இடைக்கால தீர்ப்பு வெளியிடும் நோக்கில், இருதரப்பு விவாதங்களை நீதிமன்றம் விரைவாக கேட்டறிந்தது. பின்னர், ’ஹிஜாப் அணிவது என்பது அடிப்படை உரிமைகளின் கீழ் வருமா, மேலும் அதுசார்ந்த மத நடைமுறையில் இன்றியமையாததா’ என்ற 2 அம்சங்களை ஆராயவிருப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.

பின்னர், பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், இறுதி தீர்ப்பு வெளியாகும் வரை இடைக்கால உத்தரவினை பின்பற்றுமாறு, அந்த உத்தரவினை அறிவித்தது. நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவின்படி பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப், காவித்துண்டு உட்பட மத அடையாளங்களை வெளிப்படுத்தும் எதனையும் அணிந்து செல்ல தடை விதிக்கப்படுகிறது.

பிப். 14 அன்று தொடங்கி தினசரி அடிப்படையில் விசாரணை நடத்தி வழக்கை முடிக்கவும் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. மேலும், வழக்கின் தீர்ப்பு வெளியாகும் வரை விசாரணையின்போது நீதிமன்றம் தெரிவிக்கும் வாய்மொழி கருத்துக்களை ஊடகங்கள் வெளியிட வேண்டாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

x