ஹிஜாப் போராட்ட மாணவிகள் மீது அடுத்தக்கட்ட தாக்குதல்!


கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய மாணவிகளின், கல்வி ஆவணங்களை சிலர் முறைகேடாக சமூக வலைதளங்களில் சுற்றுக்கு விட்டுள்ளனர். இதன் மூலம் தொலைபேசி அழைப்பு, வதந்திகளை பரப்புதல் என மாணவியர் மீதான அடுத்தக்கட்ட தாக்குதல் தொடங்கியுள்ளன.

இஸ்லாமிய மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து செல்வதற்கு எதிராக, கடந்த ஒன்றரை மாதங்களாக கர்நாடக மாநிலத்தில் பிரச்சினை நிலவி வருகிறது. இதில் இந்து வலதுசாரி அமைப்புகளும் குதித்ததில், போராட்டத்தின் திசை மாறியுள்ளது. இருவேறு பிரிவினருக்கு இடையே மோதல் எழுவதை தவிர்க்க, குறிப்பிட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை, 144 தடை உத்தரவு ஆகியவை அங்கே பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஹிஜாப் போராட்ட களத்தில் முன்னின்ற மாணவிகளின் தனிப்பட்ட கல்வி ஆவணங்களை விஷமிகள் சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். மாணவியரின் பெயர், புகைப்படம், முகவரி, பெற்றோர் பெயர், அவர்களது வருமானம் ஆகியவை வாட்ஸ் அப் குழுக்கள் வாயிலாக பரப்பப்படுகின்றன. உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் பயிலும் ஹிஜாப் போராட்ட மாணவிகள், இந்த வகையில் குறிவைக்கப்பட்டுள்ளனர்.

மாணவிகள் சிலருக்கும், அவர்களது பெற்றோருக்கும் அநாமதேய தொலைபேசி அழைப்புகளும், அதில் ஆட்சேபகரமான பேச்சுக்கள் புதிய தொந்தரவாகி வருகின்றன. மாணவியரின் முந்தைய வகுப்புகளின் மதிப்பெண் சான்றிதழ்களில் போலியாக சித்தரித்து, அவர்கள் குறைவான மதிப்பெண் பெற்றதாகவும், வேறு ஆதாயத்துக்காக போராட்டத்தில் இறங்கியிருப்பதாகவும் தனிப்பட்ட தாக்குதல்கள் விடுக்கப்படுகின்றன. மேலும் குடும்ப வருமானம் குறைவாக உள்ள மாணவிகளின் தகவல்களை பொதுவெளியில் பரப்பி, பணத்துக்காகவே அவர்கள் ஹிஜாப் போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் புதிய வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

கல்வி நிலையங்களுக்கு விடுமுறை, களத்தில் போராட்டங்களுக்கு தடை ஆகியவை விதிக்கப்பட்ட போதும், சமூக ஊடகங்கள் வாயிலாக, ஹிஜாப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் புதிய தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளனர். தங்களுக்கு எதிரான சமூகவெளி அவதூறுகளுக்கு எதிராகவும், கல்வி நிலைய ஆவணங்கள் வெளியானது தொடர்பாகவும், சைபர் க்ரைம் புகார் முதல் சட்டப் போராட்டங்கள் வரை மேற்கொள்ளவும் மாணவியர் தரப்பில் தயாராகி வருகின்றனர். இதன் மூலம் ஹிஜாப் போராட்டம் இன்னொரு கட்டத்தை எட்டியுள்ளது.

x