“எல்லா பயங்களிலிருந்தும் நாட்டை விடுவியுங்கள்” - உ.பி., வாக்காளர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு


உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று தொடங்கியிருக்கிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு, மாலை 6 மணி வரை நடக்கிறது. கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி வாக்குப் பதிவு நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, கரோனா பரவல் தடுப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

முதல் கட்டமாக, உத்தர பிரதேசத்தின், முஸாஃபர்நகர், மீரட், காஸியாபாத் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடக்கிறது. முதல் கட்ட தேர்தலில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 623 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 2.27 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். 10,766 தேர்தல் மையங்களில், 25,849 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

ஜாட் சமூகத்தினர் அதிகமாக உள்ள மேற்கு உத்தர பிரதேசத்திலும், தோவாப் பகுதியிலும் உள்ள தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப் பதிவு நடக்கிறது. மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய விவசாயிகளில், உத்தர பிரதேசத்தின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த ஜாட் சமூகத்தினரும் கணிசமானவர்கள். லக்கிம்பூர் கெரி சம்பவத்தில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவமும் இந்தத் தேர்தலில் தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், உத்தர பிரதேச வாக்காளர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தத்தமது பாணியில் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.

“எல்லா பயங்களிலிருந்தும் நாட்டை விடுவியுங்கள்- வெளியில் வாருங்கள், வாக்களியுங்கள்” என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தியில் ட்வீட் செய்திருக்கிறார்.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டிருக்கும் காணொலிப் பதிவில், “என் மனதில் இருக்கும் சில விஷயங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான அற்புதமான விஷயங்கள் நிகழ்ந்திருக்கின்றன. கவனம்! இதை நீங்கள் தவறவிட்டுவிட்டால், கடந்த 5 ஆண்டுகளில் உழைத்த உழைப்பு வீணாகிவிடும். உத்தர பிரதேசம் காஷ்மீராகவோ, கேரளமாகவோ, மேற்கு வங்கமாகவோ மாறுவதற்கு அதிக நேரம் பிடிக்காது” எனக் கூறியிருக்கிறார்.

மேலும், “உங்கள் வாக்கு எனது 5 ஆண்டுக்கால உழைப்புக்கான ஆசீர்வாதம். உங்கள் ஓட்டு உங்கள் அச்சமற்ற வாழ்க்கைக்கும் உத்தரவாதம் தரும். பெரிய முடிவு எடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது. கடந்த 5 ஆண்டுகளில், (மத்தியிலும் மாநிலத்திலுமாக) பாஜகவின் இரட்டை இன்ஜின் அரசு அர்ப்பணிப்புடன் எல்லா விஷயங்களையும் செய்திருக்கிறது. எல்லாவற்றையும் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். விரிவாகக் கேட்டும் இருக்கிறீர்கள்” என்று வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் யோகி ஆதித்யநாத்.

x