இந்தியாவிலேயே முதன்முறையாக அனைத்துக் கட்சி அரசு: கவனம் ஈர்க்கும் நாகாலாந்து


இந்தியாவிலேயே முதன்முறையாக, எதிர்க்கட்சிகளே இல்லாத அனைத்துக் கட்சி அரசாக மாறுகிறது நாகாலாந்து மாநில அரசு. மாநில அமைச்சராக நாகா மக்கள் முன்னணி (என்பிஎஃப்) கட்சி எம்எல்ஏ யோல்லோவ் கோன்யாக், நேற்று (பிப்.9) பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, இந்த நிலையை எட்டியிருக்கிறது நாகாலாந்து. முதல்வர் நெபியூ ரியோ, ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி (யூடிஏ) தலைவர் டி.ஆர்.ஜெலியாங் உள்ளிட்ட பலர் இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் அரசியல் வேறுபாடுகளைக் களைந்து ஒன்றிணைந்ததன் பின்னணியில் இருப்பது நாகா மக்கள் மீதான ஒட்டுமொத்த அக்கறைதான். மத்திய அரசுக்கும், நாகா அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு குழுக்களுக்கும் இடையில் தொடரும் முரண்பாடுகளைக் களைய ஐந்து மாதங்களுக்கு முன்னர், அனைத்துக் கட்சிகளும் கூடிப் பேசியபோது இதற்கான விதை போடப்பட்டது.

நாகாலாந்தின் முக்கிய எதிர்க்கட்சி நாகா மக்கள் முன்னணி தான். மொத்தம் 60 உறுப்பினர்களைக் கொண்ட நாகாலாந்து சட்டப்பேரவையில், நாகா மக்கள் முன்னணிக்கு 25 உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில், நாகா விவகாரத்தில் ‘ஒரே தீர்வு ஒரே ஒப்பந்தம்’ எனும் அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் ஆளும் மக்கள் ஜனநாயகக் கூட்டணி (பிடிஏ) அரசில் இணைந்துகொள்வது என நாகா மக்கள் முன்னணி தீர்மானித்தது. அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஐந்து அம்சத் தீர்வை நோக்கிச் செயலாற்றுவது என்றும் முடிவுசெய்யப்பட்டது.

நாகாலாந்தில் இதற்கு முன்பும் அனைத்துக் கட்சி அரசு அமைந்திருக்கிறது. 2015-ல் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியிலிருந்து 8 எம்எல்ஏ-க்கள், அன்றைய ஆளுங்கட்சியான நாகா மக்கள் முன்னணியில் இணைந்ததால் எதிர்க்கட்சிகளே இல்லாத நிலை உருவானது. கடந்த ஆண்டும் நாகா விவகாரத்தை முன்வைத்து அனைத்துக் கட்சிகளும் கைகோத்தன.

ஆனால், அப்போது கூட்டணியில் இருந்த அனைத்துக் கட்சியினரும் அமைச்சரவையில் பங்கேற்றுவிடவில்லை. இந்த முறை நாகா மக்கள் முன்னணியைச் சேர்ந்த யோல்லோவ் கோன்யாக் அமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அனைத்துக் கட்சி அரசாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது நாகாலாந்து மாநில அரசு.

பல ஆண்டுகளாக நாகா விவகாரம் நீடித்துவருகிறது. என்எஸ்சிஎன் (ஐஎம்), என்எஸ்சிஎன்(கே) உள்ளிட்ட நாகா குழுக்கள், அசாம், மணிப்பூர், அருணாசல பிரதேசம் ஆகிய அண்டை மாநிலங்களிலும், அண்டை நாடான மியான்மரிலும் நாகா இனத்தவர்கள் வசிக்கும் பகுதிகளை இணைத்து ‘நாகாலிம்’ எனும் பிரதேசத்தை உருவாக்க வேண்டும் எனும் கோரிக்கையுடன் இயங்கிவருகின்றன. என்எஸ்சிஎன் (ஐஎம்) அமைப்பு 1997 முதல் சண்டை நிறுத்தத்தைக் கடைப்பிடித்துவருகிறது. 2015 ஆகஸ்ட்டில் மத்திய அரசுக்கும், என்எஸ்சிஎன் (ஐஎம்) அமைப்புக்கும் இடையே அமைதிக்கான வரைவு ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டாலும், அந்த முயற்சி இன்னமும் இறுதிவடிவம் பெறவில்லை. அதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவந்தவர் தற்போதைய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. நாகாலாந்து கூட்டணி அரசில் பாஜகவும் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

x