‘செங்கோட்டையில் காவிக் கொடி’: கர்நாடகா அமைச்சர் தடாலடி!


சிவமோகா கல்லூரியில் ஏற்றப்படும் காவிக்கொடி

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் பெரும் அரசியல் சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது. ஹிஜாப்புக்கு போட்டியாக சில மாணவ மாணவியர் காவி அடையாளத்துடன் கல்வி நிலையங்களுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். இந்த காவிமயத்தின் உச்சமாக, சிவமோகா அரசு கல்லூரியில் தேசியக்கொடிக்கான கொடிக்கம்பத்தில் காவிக்கொடி நேற்று ஏற்றப்பட்டது. இந்த சம்பவத்தின் பின்னிருப்பதாய் எதிர்க்கட்சிகளால் குற்றம்சாட்டப்படும் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா இன்று(பிப்.9) பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது மேலும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவர் தொட்டுப் பேசினார்.

ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா பேசுகையில், “ராமச்சந்திரமூர்த்தி தேரில் பவனி வந்தபோது அதில் பறந்தது காவிக்கொடிதான். அப்போது ஏது மூவர்ணக்கொடி? இப்போது அரசியலமைப்பு சட்டப்படி நமது தேசியக்கொடியாக மூவர்ணக்கொடி அமைந்துள்ளது. அதனை மதிப்பதும், மரியாதை செலுத்துவதும் இந்தியர்களின் கடமை. இதில் கேள்வி எதுவும் எழுப்புவதற்கில்லை. ஆனால் இன்றில்லாவிட்டாலும் ஒரு நாள் நமது தேசியக்கொடியாக காவிக்கொடி மாறக்கூடும். அப்போது செங்கோட்டையில் காவிக்கொடி ஏற்றப்படும்” என்றார்.

அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா

மேலும் பேசும்போது, “ராமர் கோவில் கட்டுவோம் என்று நாங்கள் சொன்னபோது பலரும் சிரித்தனர். இப்போது நாங்கள் அதை கட்டவில்லையா? அதுபோல இந்துதர்மம் தழைக்க, சில நூறு வருடங்கள் ஆனாலும் சரி, காவிக்கொடி இந்தியாவின் தேசியக்கொடியாகியே தீரும்” என்றார் உறுதியாக.

கடைசியாக, சிவமோகா அரசுக் கல்லூரியில் தேசியக்கொடி கம்பத்தில் காவிக்கொடி ஏற்றப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் அமைச்சர் ஈஸ்வரப்பா இருப்பதாக, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் குற்றம்சாட்டுவது குறித்த கேள்விக்கும் அவர் பதிலளித்தார். “தேசியக்கொடிக்கான கம்பத்தில் தேசியக்கொடி இல்லாத போதுதான் அதில் காவிக்கொடியை ஏற்றி இருக்கிறார்கள். தேசியக்கொடியை கீழிறக்கிவிட்டு, காவிக்கொடியை ஏற்றவில்லை. காங்கிரஸ் கட்சியின் சிவக்குமார் பொய் சொல்கிறார். காங்கிரஸ் கட்சிதான் இந்து - முஸ்லிம்கள் இடையே பிரிவினையை திட்டமிட்டு வளர்க்கிறது” என்று பதிலுக்கு குற்றம்சாட்டினார்.

இதனிடையே ஹிஜாப் விவகாரத்தை முன்வைத்து பரவும் சமூக மற்றும் அரசியல் மோதல்களை தவிர்க்க, கர்நாடக கல்வி நிறுவனங்கள் அருகே போராட்டங்கள் நடத்த போலீஸார் தடைவிதித்துள்ளனர். இந்த தடை 2 வாரங்களுக்கு அமலில் இருக்குமென்றும் தெரிவித்துள்ளனர்.

x