உத்தரப் பிரதேசம், பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் தாங்கள் தற்கொலை செய்து கொள்வதாக அறிவித்துவிட்டு, பேஸ்புக் நேரலை செய்தபடி விஷம் சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்து விரைந்துவந்த போலீஸார் தம்பதியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.
உத்தரப் பிரதேசம் பாக்பத் மாவட்டத்தில் உள்ள பதாத் பகுதியில் செருப்பு, ஷு போன்ற காலணி வியாபாரம் செய்துவந்தவர் ராஜிவ் தோமர். பாக்பத்தில் உள்ள சுபாஷ்நகர் என்ற இடத்தில் மனைவி பூணம் தோமர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்துவந்தார். இந்நிலையில், பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு புதிய ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்தபிறகு, இவரது வியாபாரம் கடும் நஷ்டத்தை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த தம்பதி பேஸ்புக் நேரலை செய்தனர். அப்போது விஷ மாத்திரை ஒன்றை சாப்பிட்ட கணவர் ராஜீவ் அழுதபடி, “எனக்கு பேசும் உரிமை உள்ளது என்பதை நினைக்கிறேன். நான் பட்ட கடனை அடைத்துவிடுவேன். நான் இறந்துபோனாலும் கடனை அடைப்பேன். ஆனால், இந்தக் காணொலியை முடிந்தவரை எல்லோருக்கும் பகிரும்படி வேண்டிக்கொள்கிறேன். நான் ஒன்றும் தேச விரோதி அல்ல” என்றார். அவருடனே அழுத அவரது மனைவி பூணம் அவர்களும் விஷம் அருந்தினார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல் துறைக்குப் புகார் அளித்தனர். விரைந்துவந்த போலீஸார், இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போதே மனைவி பூணம் பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் ராஜிவ் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். விசாரணையில், ராஜிவ் தோமர் வியாபாரத்தில் நஷ்டம் அடைந்த விவரம் அவரது உறவினர்களுக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால், தற்கொலைவரை செல்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
2016-ல் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டத்துக்குப் பிறகு இந்தியாவில் லட்சக்கணக்கான சிறு, குறு வியாபாரிகள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்ட செய்திகள் வெளிவந்துள்ளன. அகில இந்திய உற்பத்தியாளர் சங்கம் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட 50 நாட்கள் கழித்து 2016 டிசம்பரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பிறகு 22-30 வயதுக்கு உட்பட்டவர்களில் 32 சதவீதத்தினர் வேலையிழந்ததாகவும் 40-55 வயதுக்குட்பட்டவர்களில் 40 சதவீதத்தினர் வேலையிழந்ததாகவும் தகவல் வெளியானது.
அதன் பிறகு கரோனா பெருந்தொற்று காலத்தில் 2020-ம் ஆண்டின் மத்தியில் 400 நிறுவனங்களிடம் மற்றொரு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் சிறு, குறு நிறுவனங்கள் ஆண்டு வருமானத்தில் 20 சதவீதம் நஷ்டம் எதிர்கொண்டுள்ளனர், பெரிய நிறுவனங்கள் 11 சதவீதம்வரை நஷ்டமடைந்துள்ளனர் என்ற தகவல் வெளியானது.