33 பழங்குடி குடும்பங்களுக்கு 15 மாதங்களாக ரேஷன் மறுப்பு


மாதிரிப் படம்

ஜார்க்கண்ட் மாநிலம் ஹெசட்டு கிராமத்தைச் சேர்ந்த 33 பூர்வ பழங்குடி கோர்வா குடும்பங்களுக்கு மாதாந்திர கோதுமை, ரவை, பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்களை மாநில உணவு குடிமைப்பொருள் துறை வழங்கவே இல்லை என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அந்த கிராமத்தில் மொத்தம் 52 குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழ்வதாக அடையாளம் காணப்பட்டு ‘அந்தியோதயா அன்ன யோஜனா’ கார்டுகள் வழங்கப்பட்டுவந்தன. அவர்களுக்கு குடும்பத்துக்கு மாதந்தோறும் 35 கிலோ இலவச கோதுமை உள்ளிட்ட பொருட்கள் 2015 முதல் வழங்கப்பட்டு வந்தன. 2020 நவம்பர் – டிசம்பர் முதல் அது நிறுத்தப்பட்டுவிட்டது. ஏன் என்று அவர்கள் ரேஷன் கடையில் கேட்டபோது, உங்களுடைய பெயர்கள் நீக்கப்பட்டுவிட்டன என்று மட்டுமே பதில் கிடைத்தது.

பெயரை எப்படி மறுபடியும் சேர்ப்பது, ஏன் நீக்கினார்கள் என்று காரணம் புரியாமல் திகைத்தார்கள் பழங்குடிகள். அவர்களுடைய தவிப்பை, ஏழைகளுக்கு உதவும் தன்னார்வலர் மாணிக்சந்த் கோர்வா தெரிந்துகொண்டார். அவர் உணவு வழங்கல் துறையின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து மக்களில் யாருக்காவது உரிய பொருட்கள் கிடைக்காமல் மறுக்கப்படுமானால் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசெல்வார்.

எனவே இதற்கு தொடர்புள்ள துறையைக் கேட்டபோது 33 குடும்பத்தினரும் இறந்துவிட்டதாகத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் பேரில் அவர்களுடைய பெயர்கள் வழங்கல் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக பதில் அளித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணிக்சந்த், “ஒரேயடியாக 33 குடும்பத்தினர் எப்படி இறந்தனர், இந்தத் தகவலுக்கு எது அடிப்படை என்று பார்க்க வேண்டாமா, அந்த கிராமத்துக்கு யாராவது அதிகாரிகள் சென்று விசாரித்தார்களா?” என்று கேட்டார். அதிகாரிகள் பதில் தெரிவிக்கவில்லை.

அவர் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கும் சென்று அலைந்து திரிந்து இறுதியில் இதை உயர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். அதற்குள் விழித்துக்கொண்ட உள்ளூர் உணவு விநியோகத் துறை, பொருள் விடுபட்டவர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் குடிமைப் பொருட்களை வழங்கும் பிஎச்எச் கார்டுகளை இந்த பிப்ரவரி மாதம் வழங்கியது. இதில் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மாதத்துக்கு 5 கிலோ உணவு தானியம் மட்டுமே கிடைக்கும். அந்தியோதயா கார்டு ஏன் தரப்படவில்லை என்று கேட்டதற்கு மீண்டும் பதில் இல்லை. இதை மீண்டும் உரியவர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறார் மாணிக்சந்த்.

கோர்வா மாவட்டத்தின் தேரி ஊராட்சியில் பர்கார் வட்டாரத்தில் இந்தக் கிராமம் இருக்கிறது. கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றில் மிகவும் பின்தங்கியுள்ள இந்த சமுதாய மக்கள் காடுகளில் கிடைக்கும் தேன், அரக்கு, இலை, மூலிகைகள் ஆகியவற்றைச் சேகரித்து விற்றும், பருவகாலத்துக்கேற்ப விவசாய நிலங்களில் கிடைக்கும் கூலி வேலைகளுக்கும் செல்கிறார்கள். குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகளின் அலட்சியத்தாலும் கோரிக்கைகளுக்குப் பிறகும் புறக்கணித்த மெத்தனத்தாலும் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக கால் வயிற்றுக் கஞ்சிக்குக் கூட வழியில்லாமல் அவதிப்பட்டுள்ளனர். இந்த விடுபடல் குறித்து விசாரணை நடத்துவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாநில உணவுத் துறை அமைச்சர் ரமேஷ்வர் ஓரான், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் வறுமையில் சிக்கிய குடும்பங்கள் சாப்பிட உணவு கிடைக்காமல் பல நாள்கள் பட்டினியிருந்த பிறகு இறந்துவிட்டதாக வெளியான செய்தியை அடுத்து, உணவு பெறும் உரிமை அனைவருக்கும் இருக்கிறது, ஏழைகளுக்கு விலையில்லாமல் அரிசி வழங்க வேண்டும் என்று 2003 மே மாதம் உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்கள், கணவரை இழந்த பெண்கள், தனியொருவராக வாழும் பெண்கள் ஆகியோருக்கும் இலவசமாக உணவு தானியம் வழங்கப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் கண்டிப்புடன் கூறியிருந்தது. ஆனால் எந்த மாநிலத்திலும் அதிகாரிகள் இதற்கு முக்கியத்துவம் தருவதாகத் தெரியவில்லை. அவ்வப்போது இப்படி உணவுப் பொருள் மறுக்கும் சம்பவங்கள் பற்றி தகவல்கள் வந்து கொண்டேயிருக்கின்றன.

குடும்பம் குடும்பமாக ஏராளமானவர்களுக்கு ரேஷன் பொருட்களை மறுத்ததுடன், அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று சரிபார்க்க எந்த முனைப்பும் இல்லாமல் அறிவிக்க அதிகாரிகளுக்கு எப்படி கல் மனது ஏற்பட்டது என்று வியப்பாக இருக்கிறது.

x