ஹிஜாப் விவகாரத்தால் பதற்றம்!- கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் மாணவர்கள் மத்தியில் பதற்றம் நிலவுவதால் உயர்நிலைப்பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார் மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை.

கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்யக்கோரி சிறுபான்மை பிரிவு தொடர்ந்த வழக்கு அம்மாநில உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரித்து ராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என வாதிட்டார்.

சீருடை குறித்து முடிவு செய்ய கல்லூரி நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது என்று அரசு தரப்பில் முன்வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, மாணவிகள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருவதை தொலைக்காட்சிகளில் தினமும் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. இறுதி தேர்வுக்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கிறது. இந்த 2 மாதங்கள் மட்டும் ஏன் இந்த புதிய சட்டத்தை நிறுத்தி வைக்கக்கூடாது என கேள்வி எழுப்பியோடு, வழக்கு விசாரணையை மாலை வரை ஒத்திவைத்தது.

இதனிடையே, மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவர்களின் போராட்டம் வெடித்துள்ளதால் உயர்நிலைப்பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை அறிவித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

x