மூத்த தலைவர்கள் விலக வேண்டும்: அபிஷேக் பானர்ஜி சொல்வதன் அர்த்தம் என்ன?


அபிஷேக் பானர்ஜி

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளரும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் அண்ணன் மகனுமான அபிஷேக் பானர்ஜி கட்சியில் மிகுந்த செல்வாக்குள்ளவராக வளர்கிறார். மம்தாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் மட்டுமல்ல, அரசியல் ஆர்வம் காரணமாகவே தேர்தல் உத்தி வகுப்பது, கூட்டணி குறித்துப் பேசுவது, கட்சியின் சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவ்வப்போது கட்டளைகளைப் பிறப்பிப்பது என்று துடிப்பாகச் செயல்படுகிறார். கட்சிக்குத் தேவைப்படும் நிதியை, தானே பல்வேறு துறையினரையும் தொடர்புகொண்டு வசூலிக்கிறார். தன்னுடைய அத்தை, பாரம்பரியமான எளிய வீட்டிலேயே வாழ்ந்தாலும் தன்னுடைய கட்சியின் அந்தஸ்துக்கேற்ப நகரின் முக்கியமான இடத்தில் வசதியான பெரிய மாளிகையில் அதி நவீன வசதிகளுடன் வாழ்கிறார்.

அவ்வப்போது அரசியல் தொடர்பாகவும், கட்சி நடவடிக்கைகள் குறித்தும் தன் மனதுக்குத் தோன்றும் கருத்துகளையும் பகிர்ந்துவருகிறார். இந்நிலையில், கட்சியின் மூத்த தலைவர்கள், தீவிரப் பணிகளிலிருந்து விலகி இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் ஓய்வுபெற வயது வரம்பு அவசியம் என்று அவர் வலியுறுத்தியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது. இதற்கு தேசிய அளவில் பாஜகவும், மாநில அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் முன்னோடிகள் என்று மேற்கு வங்க அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மார்க்கதரிசி மண்டல்

வாஜ்பாய் பிரதமராக ஆறு ஆண்டுகள் மட்டும்தான் இருக்க முடிந்தது. ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற பிரச்சாரம் எடுபடாததால் பாஜக தோல்வி அடைந்து, ஆட்சியை இழந்தது. அதன் பிறகு, ‘நரேந்திர மோடிதான் பிரதமர் பதவிக்கான வேட்பாளர்’ என்று கட்சி அறிவித்து பிறகு அவர் பிரதமரானது வரலாறு. கட்சியின் நிறுவனர் தலைவரான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட மூத்த தலைவர்களால் தனக்கு இடையூறு வரக்கூடாது என்று ‘மார்கதர்சி மண்டல்’ என்றொரு மூத்தவர்கள் வழிகாட்டும் அமைப்பை கட்சிக்குள் ஏற்படுத்தினார் மோடி. அத்வானி, ஜோஷி போன்ற மூத்தவர்கள் இதில் இடம் பெறுவார்கள். அவர்கள் கட்சியின் மத்திய, மாநிலத் தலைவர்களுக்கு அவ்வப்போது ஆலோசனைகளைக் கூறுவார்கள் என்றனர்.

பிரதமர் மோடி - பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி

ஆனால் இந்த அமைப்பு அமைக்கப்பட்ட பிறகு கூடியதாகவோ, எதைப் பற்றியாவது விவாதித்து கட்சிக்கு அறிவுரை கூறியதாகவோ, அதை அவர்கள் ஏற்றுக்கொண்டதாகவோ ஒரு செய்தியும் வரவில்லை. ‘உங்களுக்கு வயதாகிவிட்டது, ஒதுங்கிக்கொள்ளுங்கள்’ என்ற ஒற்றை வரி கருத்துதான் இப்படி மார்க்கதர்சி மண்டலாக பெயர் பெற்றது. கட்சியின் மூத்த தலைவர்கள் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் நிறுத்தப்படாமலிருக்கவும் இந்த யோசனை பயன்படுகிறது.

மூத்தோர் - இளையோர் உரசல்

திரிணமூல் காங்கிரஸிலும் மூத்தவர்களுக்கும் அபிஷேக் பானர்ஜி போன்ற இளையவர்களுக்கும் உரசல்கள் ஏற்படுகின்றன. மூத்தவர்கள் முதலமைச்சர் மம்தாவுக்கு நெருக்கமானவர்களாக இருக்கின்றனர். அவர்களை விலக்கி வைக்க அபிஷேக் விரும்புகிறார். இதைத் தவறு என்றும் சொல்ல முடியாது. வயதானவர்கள் வீட்டைவிட்டு வரவே கூடாது என்று பெருந்தொற்றுக் காலத்தில் உலக சுகாதார நிறுவனமே கேட்டுக்கொண்டது. இந்திய அரசியலைப் பொறுத்தவரை பல அரசியல் கட்சிகளில் தலைமைப் பதவியைப் பிடிப்பதற்குள் (குடும்பக் கட்சிகளில் அல்ல) 60 வயதாகிவிடுகிறது. முதலமைச்சர், அமைச்சர் போன்ற பதவிகளைப் பெறுவதற்கும் அனேக ஆண்டுகள் தவம் செய்ய வேண்டியிருக்கிறது. எனவே அபிஷேக்கின் யோசனையை, குரூரமான யோசனையாகவே மூத்த தலைவர்கள் பார்க்கின்றனர்.

அபிஷேக் பானர்ஜி

தங்களுடைய இளமைக் காலத்தையெல்லாம் கட்சி வளர்ச்சிக்காக செலவிட்டவர்களை, வயதானதும் ஒதுங்கச் செல்வது நியாயமா என்று கேட்கின்றனர். அமைச்சர், வாரியத் தலைவர் போன்ற பதவிகள் கொடும் வெயிலிலும் கடும் குளிரிலும் வெட்ட வெளியில் நின்று செய்ய வேண்டிய வேலைகள் அல்ல. எனவே அந்தப் பொறுப்புகளிலிருந்து விலக்குவது சரியில்லை என்பதே பல வயதானவர்களின் கருத்து. இன்னொன்று - அரசியல் அனுபவம், மக்களை நேரடியாகச் சந்திப்பதால் ஏற்படும் அனுபவம் ஆகியவை கனிந்துவரும் வேளையில் வயதை ஒரு காரணமாகக் காட்ட வேண்டிய அவசியமில்லை என்பது 60 வயதுக்குப் பிறகும் பதவி பெற முடியாதவர்களின் கருத்து.

அரசு ஊழியர்கள், அதிகாரிகள், பள்ளி - கல்லூரி ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் - அதிகாரிகள் ஆகியோர் 58 அல்லது 60 வயதுக்குப் பிறகு ஓய்வு பெறும்போது அரசியல் தலைவர்களும் ஓய்வு பெறுவதில் என்ன தவறு என்று கட்சிப் பதவிகளுக்காகக் காத்திருக்கும் இளையவர்கள் கேட்கின்றனர். பிற பணிகளில் அவர்கள் தொடர்ச்சியாக வேலை செய்ய முடியும், ‘சம்பாதிக்க’ முடியும். அரசியலில் தொடர்ந்து வெற்றி பெறுவதும் பதவியில் அமர்வதும் நிச்சயமில்லை. ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் ‘சம்பாதிப்பது’ (மக்களின் அன்பு – ஆதரவுதான்) அடுத்த தேர்தலைச் சந்திப்பதற்கே போதுமானதாக இருப்பதில்லை. எனவே அரசியலுக்கு எதற்கு இந்த ஓய்வும் வயதும் என்று மூத்தவர்கள் கேட்கின்றனர்.

அரசியல் சூட்சுமங்கள்

அரசியல்வாதிகள் எப்போதுமே தனி இனம். எந்த வேலைக்கும் குறைந்தபட்ச கல்வித் தகுதி, தொழில் திறமை போன்றவை அவசியம். அரசியலில் மட்டும் போட்டியிடுவதற்குத் தகுதியான வயதில் இருந்தால் போதும். குறைந்தபட்சக் கல்வி போன்ற தகுதிகள் எதுவும் தேவையில்லை. மனநோயாளியாக இருக்கக் கூடாது, குற்ற வழக்குகளில் கடுமையான தண்டனை பெற்றவர்களாக இருக்கக் கூடாது (வழக்கில் சிக்கியிருக்கலாம்) என்பவைதான் தகுதிகள். இப்போதெல்லாம் கட்சி நிர்வாகப் பதவிகளே பெரிய அரசியல் கட்சிகளில் கடுமையான நாற்காலிச் சண்டைக்கு உள்ளாகின்றன. ஆட்சிக்கு வராமலேயே சம்பாதிக்கும் கலையும் கைவந்துவிட்டது. எனவே பலர் தங்களுடைய இடத்தை விட்டுத்தர மனமில்லாமல் கட்சித் தலைவருடனான அல்லது குடும்பத்தாருடனான தனிப்பட்ட நட்பு, விசுவாசத்தை வளர்த்துப் பதவிகளில் நீடிக்கின்றனர்.

தனது அத்தை மம்தா பானர்ஜியுடன் அபிஷேக் பானர்ஜி

அரசியலில் ஓய்வு பெறும் வயதாக 60, 65 அல்லது 70 என்று ஒன்றை ஏற்படுத்த வேண்டும், அதை அந்தந்த அரசியல் கட்சிகளே கூட அமைப்பு விதிகளில் செய்யலாம் என்று அபிஷேக் கூறியிருக்கிறார். அவருடைய அத்தைக்கு இப்போது வயது 67. அவர் கூற்றுப்படி இன்னும் மூன்று ஆண்டுகள் அதிகபட்சம் அவரால் முதலமைச்சராக இருக்க முடியும். மேற்கு வங்க அமைச்சர்களில் கேபினட் அந்தஸ்துள்ள 21 பேரில் 5 பேர் 70-களிலும் 12 பேர் 60-களிலும் இருக்கின்றனர். அடுத்து இன்னொரு யோசனையையும் அபிஷேக் முன் வைத்திருக்கிறார். கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி மட்டும்தான் தரப்பட வேண்டும் என்கிறார். பார்த்தா சட்டர்ஜி (70), ஃபிர்ஹாத் ஹகீம் (63), சுபவ்ரத பக்ஷி (71) ஆகியோர் இரண்டு பதவிகளை வகிக்கின்றனர். பக்ஷி கட்சியிலேயே இரு பதவிகளை வகிக்கிறார். பார்த்தா சட்டர்ஜி அமைச்சராக இருப்பதுடன் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருக்கிறார். ‘நாரதா’ லஞ்ச விவகாரத்தில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட ஹகீம், கோல்கத்தா நகர மேயராகவும் பதவி வகிக்கிறார். இதை அபிஷேக் மட்டுமல்ல கட்சியில் மேலும் பலரும் விரும்பவில்லை. கட்சியோ - ஆட்சியோ ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே என்பது தமிழ்நாட்டில் திமுகவில் அமல்படுத்தப்படுகிறது. கட்சியின் வெற்றிக்காக பாடுபட்ட எத்தனையோ செயல்வீரர்கள் ஒரு பதவி கூட இல்லாமல் இருக்கும்போது, ஒருவரே இரு பதவிகளில் இருப்பது நியாயமில்லையே!

மேற்கு வங்க மார்க்சிஸ்ட் முடிவு

மார்க்சிஸ்ட் கட்சியும் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறது. மேற்கு வங்கத்தில் இனி 60 வயதைக் கடந்தவர் எவரும் மாநிலக் குழுவில் புதிதாக இடம்பெற முடியாது. மாநிலக் குழுவில் உறுப்பினர்கள் அதிகபட்சம் 72 வயது வரையில் இருக்கலாம். மாவட்டக் குழுவுக்கு அதிகபட்ச வயது வரம்பு 70. வட்டாரக் குழுவுக்கு அதிகபட்ச வயது 65. மத்தியக் குழுவில் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருந்தால் அவர்கள் தாங்களாகவே விலகி, ஓய்வு பெற வேண்டும் என்று கட்சி முடிவு செய்திருக்கிறது.

இதேதான் உத்தர பிரதேசத்திலும் முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சியிலும் பிரச்சினையாகியது. முலாயம் ஓய்வு பெற்ற நிலையில் இருப்பதால் அவருடைய நெருங்கிய சகாக்களுக்கும் ஓய்வு தரப்பட்டுவிட்டது. பிஹாரின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியில் லாலு பிரசாதும் அவருடைய மனைவியும் ஒதுங்கிக்கொண்டு கட்சியை மகன்களிடம் ஒப்படைத்துவிட்டனர் என்றே கருதப்பட்டது. எனினும், கட்சியின் தேசியத் தலைவர் பதவியை தேஜஸ்விக்குக் கொடுப்பதற்குத் தயாராக இல்லை என்றே லாலு சமீபத்தில் பேசியிருந்தார்.

(இடமிருந்து வலம்) ராகுல் காந்தி, சித்து, சரண்ஜீத் சிங் சன்னி, சுனில் ஜாக்கர்

காங்கிரஸ் கட்சிக்குள்ளும் மூத்தவர்களால்தான் பிரச்சினையே என்பது மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில உள்கட்சி மோதல்களிலிருந்து அறியமுடிகிறது. பஞ்சாபில் முதல்வர் வேட்பாளர் சரண்ஜீத் சிங் சன்னி தான் என்று தலைமை திட்டவட்டமாக அறிவித்ததும், தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் கட்சியின் தொண்டராகத் தொடர்வதாகவும் மூத்த காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர் அறிவித்துள்ளார். சிலர்தான் இப்படி தங்களுக்கு வயதாகிவிட்டதை உணர்ந்து மற்றவர்களுக்கு இடம் தருகின்றனர். அரசியல்வாதிகளும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் வயதாகும்தானே!

x