ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதி!


ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள்

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பை தொடர்ந்து மீண்டும் மாணவிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் தனி வகுப்பறையில் அமரவைக்கப்பட்டதால் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.

கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவது குறித்து இந்துத்துவா அமைப்பினர் சர்ச்சையை கிளப்பினர். இதையடுத்து ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் பள்ளிக்கு வெளியிலேயே நிறுத்தப்பட்டதால் இந்த பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. காஙகிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே, சம்பந்தப்பட்ட அரசு கல்லூரி மூடப்பட்டது. மீண்டும் கல்லூரி திறக்கப்பட்டுள்ள நிலையில், ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில், அந்த மாணவிகள் மட்டும் தனி வகுப்பறையில் அமரவைக்கப்பட்டனர்.

இதனிடையே, குண்டாப்பூர் வெங்கடரமணா மற்றும் அரசு கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் காவி துண்டை அணிந்து கொண்டு ஜெய்ஸ்ரீ ராம் முழக்கமிட்டபடி கல்லூரிக்குள் நுழைய முற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. அவர்களை தடுத்து நிறுத்திய ஆசிரியர்கள் காவித்துண்டை அகற்றுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து, கல்லூரி வாசலில் கர்நாடக அரசின் ஒரே சீருடை சட்டத்தின் நகல்கள் ஒட்டப்பட்டன. ஹிஜாப் விவகாரம் காரணமாக சில கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பிற மாவட்டங்களுக்கும் தற்போது பரவி வருவதால், ஹிஜாப் தொடர்பான வழக்கு பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

x