ஜேஎன்யூ பல்கலைக்கழகத்துக்கு முதல் பெண் துணைவேந்தர் நியமனம்!


சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட்

டெல்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தராக, சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட்டை மத்திய கல்வியமைச்சகம் இன்று (பிப்.7) நியமித்திருக்கிறது. “அவரது நியமனத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அங்கீகரித்திருக்கிறார். ஐந்து ஆண்டுகளுக்கு சாந்திஸ்ரீ துலிபுடி அந்தப் பணியில் நீடிப்பார்” என்று மத்திய கல்வி அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

மகாராஷ்டிரத்தின் புணே நகரில் உள்ள சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணிபுரிந்துவரும் சாந்திஸ்ரீ, எம்.ஃபில் முடித்ததது ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்தான். சர்வதேச உறவுகள் குறித்து முனைவர் பட்ட ஆய்வையும் அப்பல்கலைக்கழகத்தில்தான் இவர் மேற்கொண்டார்.

1988-ல் கோவா பல்கலைக்கழகத்தில் தனது ஆசிரியப் பணியைத் தொடங்கிய சாந்திஸ்ரீ, 1993-ல் புணே பல்கலைக்கழகத்துக்கு மாற்றலாகிச் சென்றார். அங்கு பல்வேறு கல்விக் குழுக்களில் அவர் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருக்கிறார். பல்கலைக்கழக மானியக் குழுவிலும், இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலிலும் உறுப்பினராக இருந்த அவர், மத்திய பல்கலைக்கழகங்களின் பார்வையாளர் நியமனக் குழுவிலும் அங்கம் வகித்திருக்கிறார்.

பேராசிரியராகப் பணிபுரிந்த காலத்தில், 29 பேரின் முனைவர் பட்ட ஆய்வு வழிகாட்டியாக சாந்திஸ்ரீ இருந்திருக்கிறார். சர்வதேச உறவுகள் குறித்த விரிவுரைகள் அடங்கிய அவரது காணொலிகள் யூடியூபில் ஏராளமாகப் பதிவிடப்பட்டிருக்கின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக (பொறுப்பு) இருந்த எம்.ஜெகதீஷ் குமாரின் பணிக்காலம் கடந்த ஆண்டு நிறைவுற்றது. இதையடுத்து, கடந்த வாரம், பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

x