“எளிதான பணி அல்ல அரசியல்!” - ராகுல் கருத்தின் பின்னணி என்ன?


அரசியல் தலைவர்கள் 10-15 நாட்களில் பிறப்பு எடுப்பதில்லை. தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதன் மூலம் உருவாவதில்லை” என்று பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவை முன்வைத்து ராகுல் காந்தி சூசகமான கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்.

பாஜகவில் 13 வருடங்கள் அங்கம் வகித்த சித்து, 2017 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாகத்தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கட்சிக்குள் இருந்தபடியே, கேப்டன் அமரீந்தர் சிங் அரசைக் கடுமையாக விமர்சித்துவந்தார். ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையிலான மோதலால், அமரீந்தர் சிங்கைப் பதவிவிலகுமாறு கட்சித் தலைமை கேட்டுக்கொண்டது. இதனால் தான் அவமதிக்கப்பட்டதாகக் குமுறிய அமரீந்தர் சிங், அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். பின்னர், பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் கட்சியைத் தொடங்கி பாஜக கூட்டணியுடன் இந்தத் தேர்தலில் களமிறங்கியிருக்கிறார்.

முதல்வர் வேட்பாளராக சரண்ஜீத் சிங் சன்னி

காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் சரண்ஜீத் சிங்கின் பெயரை, லூதியானாவில் நேற்று அறிவித்தார் ராகுல். ஜாட் சீக்கியரான சித்து, இந்து மதத்தைச் சேர்ந்தவரான சுனில் ஜாக்கர் ஆகியோரின் பெயர்களும் முதல்வர் வேட்பாளர் ரேஸில் இருந்த நிலையில், பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த சீக்கியரான சரண்ஜீத் சிங் சன்னியையே முதல்வர் வேட்பாளராகக் காங்கிரஸ் தலைமை தேர்ந்தெடுத்திருக்கிறது. சித்து, சுனில் ஜாக்கர், சரண்ஜீத் சிங் சன்னி ஆகிய மூவருடன் ஒரே காரில் பயணித்ததன் மூலம் கட்சிக்குள் எந்த அதிருப்தியும் இல்லை என்பதையும் ராகுல் காந்தி சூசகமாக உணர்த்தியிருந்தார்.

அத்துடன், இந்த முடிவை எடுத்ததற்கான காரணிகளையும் நேற்று அவர் பட்டியலிட்டார்.

“முதல்வர் வேட்பாளர் யார் எனும் முடிவை நான் எடுக்கவில்லை. பஞ்சாப் மக்களிடமும், இளைஞர்களிடமும், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களிடமும் கருத்து கேட்டிருந்தேன். எனக்கென ஒரு அபிப்ராயம் இருக்கலாம். ஆனால், என் அபிப்ராயத்தைவிட உங்கள் அபிப்ராயம்தான் மிகவும் முக்கியம். ஏழை மக்களைப் புரிந்துகொள்ளக்கூடியவர்தான் தேவை என பஞ்சாப் மக்கள் கூறியிருந்தனர்” என்றார் ராகுல்.

தலைவர்களை வளர்த்தெடுக்க காங்கிரஸில் ஒரு நடைமுறை பின்பற்றப்படுவதாகக் குறிப்பிட்ட ராகுல், தன்னையே அதற்கு ஓர் உதாரணமாகவும் சுட்டிக்காட்டினார்.

“நான் 2004 முதல் அரசியலில் இருக்கிறேன். கடந்த 6 வருடங்களில் கற்றுக்கொண்டதைப் போல அதிகமாக இதற்கு முன் கற்றுக்கொண்டதில்லை. அரசியல் என்பது எளிதான பணி என சிலர் நினைக்கிறார்கள். அது தவறு. நிறைய விமர்சகர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒரு தலைவரை வளர்த்தெடுப்பது அத்தனை எளிதானதல்ல” என்றார்.

ஏற்கெனவே, கேப்டன் அமரீந்தர் சிங்குடன் மோதிய சித்து, சரண்ஜீத் சிங்குடனும் அவ்வப்போது முரண்பட்டுவருகிறார். எதிர்காலத்தில் சரண்ஜீத் சிங்குக்குச் சவாலாக அவர் உருவாகக்கூடாது என்பதில் ராகுல் தெளிவாக இருக்கிறார்.

தனது உரையின்போது சரண்ஜீத் சிங்கையும், சித்துவையும் ஒப்பிட்டுப் பேசிய அவர், “சரண்ஜீத் சிங் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரிடம் ஆணவப்போக்கை இதுவரை கண்டிருக்கிறீர்களா? அவர் நேரடியாகச் சென்று மக்களைச் சந்திக்கிறார். ஏழைகளின் குரலாக இருக்கிறார்” என்று கூறினார்.

ராகுலின் வார்த்தைகளை அமைதியாகக் கேட்டுக்கொண்ட சித்து, தனது உரையின்போது, “எனக்கு முடிவு எடுக்கும் அதிகாரத்தை நீங்கள் வழங்கவில்லை என்றாலும், நான் அடுத்த முதல்வரை ஆதரிப்பேன்” என்று கூறினார். அதேவேளையில், தான் மக்கள் நலனுக்காகவே பேசிவருவதாகக் குறிப்பிட்ட சித்து, “என்னை ஒரு காட்சிப்பொருளாக மட்டும் நடத்திவிட வேண்டாம்” என்று உரிமையுடன் கோரிக்கையும் வைத்தார்.

x