கேரளத்தில் பொதுமுடக்கம்: தமிழக வாகனங்கள் எல்லையில் நிறுத்தம்


கேரள முதல்வர் பினராயி விஜயன்

கேரளத்தில் 3-வது வாரமாக, இன்றும் ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும்வகையில், கேரள அரசு பொதுமுடக்கத்தை இப்போதும் தொடர்ந்து வருகிறது.

கேரளத்தில் 2-வது அலையைப் போலவே, 3-வது அலையிலும் கரோனா வைரஸ் தொற்றுப்பரவல் உச்சத்தில் உள்ளது. கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும்வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். கேரள முதல்வர் பினராயி விஜயன் தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்தும்வகையில், ஞாயிற்றுக்கிழமைகளுக்கு மட்டுமான பொதுமுடக்கத்தை அமல்படுத்தினார். அதன்படி இன்று 3-வது ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமலில் உள்ளது.

கேரளத்தில் மொத்தமுள்ள 16 மாவட்டங்களிலும் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் கடுமையாகக் கடைபிடிக்கப்படுகின்றன. அத்தியாவசியப் பொருட்களான பால், மருந்துக்கடைகள், மருத்துவமனைகள் மட்டுமே திறந்துள்ளன. தேவையின்றி வெளியில் வருவோரை போலீஸார் தகுந்த அறிவுரைகள் கூறி வீட்டுக்கு அனுப்பி வருகின்றனர். இதேபோல் தமிழக, கேரள எல்லையோரப் பகுதியான களியக்காவிளை வரை மட்டுமே தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல் மருத்துவக் காரணங்கள், திருவனந்தபுரம் விமான நிலையம் செல்வோர் தவிர்த்து, ஏனைய காரணங்களுக்காக எல்லை கடக்கும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.

இதேபோல் தொற்றுப்பரவல் அதிகம் இருக்கும் பகுதிகளை ஏ, பி, சி என வகைப்படுத்தியுள்ள கேரள அரசு, தொற்று அதிகமுள்ள பகுதிகளில் மட்டும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தொற்றுப் பரவல் அதிகமுள்ள பகுதிகளில் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது.

x