பெருந்தொற்றுக்கு எதிரான போரில் அடுத்த தடுப்பூசி: 5 கோடி கோர்பிவேக்ஸ் கொள்முதல்


கோர்பிவேக்ஸ்

கோவாக்சின், கோவிஷீல்ட் வரிசையில் உள்நாட்டிலேயே உற்பத்தியாகும் ’கோர்பிவேக்ஸ்’ என்ற கரோனா தடுப்பூசியை, 5 கோடி எண்ணிக்கையில் மத்திய அரசு கொள்முதல் செய்கிறது.

கரோனா 3-வது அலையை, வெற்றிகரமாக எதிர்கொண்டு வருகிறது இந்தியா. கரோனா 2-வது அலை காலத்தில் எதிர்கொண்ட பாதிப்புகள், தொற்று எண்ணிக்கை, மருத்துவமனைகள் ஸ்தம்பிப்பு, பெருமளவிலான உயிரிழப்பு ஆகியவை இன்றி, தேசம் சமாளித்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணம், பெருமளவிலான இந்தியர்களை கரோனா தடுப்பூசிகள் சென்று சேர்ந்து இருப்பதே. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் ஆகிய உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் உதவியுடன் இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் முன்னேறி வருகிறது.

மேலும், தடுப்பூசிகள் முழுமையாக மக்களைச் சென்று சேர்வதற்கான நோக்கத்தில், கூடுதல் எண்ணிக்கையில் அவை கொள்முதல் செய்யப்பட உள்ளன. அந்த வகையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ’பயாலஜிகல்-இ’ நிறுவனத்திடம் இருந்து சுமார் 5 கோடி டோஸ், கோர்பிவேக்ஸ் என்ற தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்ய இருக்கிறது. இந்தத் தடுப்பூசி, 28 நாட்கள் இடைவெளியில் 2 டோஸ்களாக அளிக்கப்பட உள்ளன.

தற்போது, 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்களப்பணியாளர்கள், 60 வயதைக் கடந்தவர்களில் இணைநோயர்கள் ஆகியோருக்கு 3-வது டோஸாக, பூஸ்டர் தடுப்பூசியும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 15-18 வயதுடைய வளரிளம் பருவத்தினருக்கான முதல் டோஸ் தடுப்பூசியும் அளிக்கப்பட்டு வருகிறது.

அவர்களுக்கான 2-வது டோஸ் விரைவில் அளிக்கப்பட இருப்பதுடன், அனைவருக்குமான பூஸ்டர் டோஸ், 15 வயதுக்கு உட்பட்டோருக்கான கரோனா தடுப்பூசி ஆகியவையும் அடுத்தகட்ட இலக்காக உள்ளன. இவற்றுக்கு அப்பால் கணிசமான எண்ணிக்கையில், கரோனா தடுப்பூசிகளைப் பெறாமல் இருப்பவர்களை குறிவைத்து புதிய தடுப்பூசிகள் களமிறங்க உள்ளன.

x