உத்தராகண்ட் தேர்தலில் வெற்றி யாருக்கு?


மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட உத்தராகண்ட் சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 14-ல் ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது.

2017 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 57 இடங்களில் வென்று ஆட்சியமைத்தது. காங்கிரஸுக்கு 11 இடங்களே கிடைத்தன. இந்நிலையில், இந்த முறை வெற்றி யாருக்கு என கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டிருக்கின்றன. ஆளுங்கட்சியான பாஜகவுக்கும் எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுவதாகவே கருதப்படுகிறது.

காங்கிரஸுக்கு வாய்ப்பா?

காங்கிரஸுக்கு 35 இடங்களும் பாஜகவுக்கு 33 இடங்களும் கிடைக்கும் என்கிறது இந்தியா டிவி நடத்திய கருத்துக்கணிப்பு. காங்கிரஸுக்கு 46 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என்றும், பாஜகவுக்கு அதை விட ஒரு சதவீதம் குறைவான வாக்குகள் கிடைக்கலாம் என்றும் இந்தியா டிவி கணித்திருக்கிறது. ‘ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு இடம் கிடைக்கலாம். பகுஜன் சமாஜ் கட்சிக்கு அதற்கும் வாய்ப்பு இல்லை. பிற கட்சிகளுக்கு அதிகபட்சம் 2 இடங்கள் கிடைக்கலாம்’ என்று அந்தக் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

எனினும், டைம்ஸ் நவ் - வீட்டோ கருத்துக் கணிப்பு பாஜகவுக்கே வாய்ப்பு அதிகம் என்கிறது. பாஜகவுக்கு 40 முதல் 50 இடங்கள் கிடைக்கும் என்றும் காங்கிரஸுக்கு 12 முதல் 15 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் அந்தக் கருத்துக்கணிப்பு சொல்கிறது. பாஜகவுக்கு 43.09 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும், காங்கிரஸுக்கு 30 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் அந்தக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. ஆம் ஆத்மி கட்சிக்கு 16 சதவீத வாக்குகள் கிடைக்கலாம் என்றும் டைம்ஸ் நவ் - வீட்டோ கணித்திருக்கிறது.

ரிபப்ளிக் - பி மார்க் நடத்திய கருத்துக் கணிப்பும் பாஜகவுக்கே மீண்டும் அரியணை என்கிறது. அக்கட்சிக்கு 36 முதல் 42 இடங்கள் கிடைக்கும் என்றும், காங்கிரஸுக்கு 25 முதல் 31 இடங்கள் கிடைக்கும் என்றும் அந்தக் கருத்துக்கணிப்பு கூறுகிறது.

எனினும், ஏபிபி நியூஸ் - சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு 31 முதல் 37 இடங்கள் வரை பாஜகவுக்குக் கிடைக்கும் என்றும் காங்கிரஸ் 30 முதல் 36 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் தெரிவிக்கிறது. ஆம் ஆத்மி கட்சிக்கு 2 முதல் 4 இடங்கள் கிடைக்கும் என்றும் அந்தக் கருத்துக்கணிப்பு கூறுகிறது.
காங்கிரஸ், பாஜக என தேசியக் கட்சிகள் இரண்டும் மாறி மாறி அரியணை ஏறிய உத்தராகண்டில், இந்த முறை இரு கட்சிகளுக்கும் மாற்றாகத் தன்னை முன்னிறுத்திவருவது குறிப்பிடத்தக்கது.

x