உத்தர பிரதேசத்தில் வெற்றிவாய்ப்பு யாருக்கு?


உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10 தொடங்கி, ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. மார்ச் 10-ல் தேர்தலின் முடிவு வெளியாகிறது.

மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் 1,74,351 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 15 கோடி வாக்காளர்கள் பங்கேற்கும் மாபெரும் ஜனநாயகத் திருவிழா இது.

2017 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு 312 இடங்கள் கிடைத்தன. மொத்தமாக பாஜக கூட்டணி 325 இடங்களைக் கைப்பற்றியது. சமாஜ்வாதி கட்சி 47 தொகுதிகளில் வென்றது. பகுஜன் சமாஜ் கட்சி 19 இடங்களில் வெற்றிபெற்றது.

இந்த முறை, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்டவை களத்தில் இருந்தாலும் பாஜகவுக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையில்தான் பிரதானப் போட்டி. தேர்தல் முடிவு பாஜகவுக்குச் சாதகமாக இருக்கும் என்றே ஏறத்தாழ எல்லா கருத்துக்கணிப்புகளும் சொல்கின்றன.

இதுவரை வெளியான கருத்துக்கணிப்புகளைப் பார்க்கலாம்.

டைம்ஸ் நவ் - வீட்டோ இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 212 முதல் 231 இடங்கள் கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. சமாஜ்வாதி கூட்டணிக்கு 147 முதல் 158 இடங்கள்; பகுஜன் சமாஜ் கட்சிக்கு 10 முதல் 16 இடங்கள்; காங்கிரஸ் கட்சிக்கு 9 முதல் 15 இடங்கள்; இதர கட்சிகளுக்கு 2 முதல் 5 இடங்கள் வரை கிடைக்கலாம் என்கிறது அந்தக் கருத்துக்கணிப்பு.

ஜீ டிவி கருத்துக்கணிப்பின்படி, பாஜகவுக்கு 245 முதல் 267 இடங்கள் வரை கிடைக்கலாம் எனத் தெரியவருகிறது. 125 முதல் 148 இடங்களில் சமாஜ்வாதி கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு 5 முதல் 9 இடங்களும், காங்கிரஸுக்கு 3 முதல் 7 இடங்களும், இதர கட்சிகளுக்கு 2 முதல் 6 இடங்களும் கிடைக்கும் என்கிறது ஜீ டிவி கருத்துக்கணிப்பு.

இந்தியா டிவி நடத்திய கருத்துக்கணிப்பு, பாஜகவுக்கு 242 முதல் 244 இடங்கள் கிடைக்கும்; சமாஜ்வாதி கட்சிக்கு 148 முதல் 150 இடங்கள் கிடைக்கும் என்கிறது. காங்கிரஸுக்கு 3 முதல் 5 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும், இதர கட்சிகள் 1 முதல் 3 இடங்களைக் கைப்பற்றும் என்றும் அந்தக் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

கருத்துக்கணிப்புகள் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்றும், எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என முடிவெடுக்கத் தடுமாறுபவர்கள், வெல்லும் வாய்ப்புள்ளதாகக் கருத்துக்கணிப்புகள் சொல்லும் கட்சிகளுக்கே வாக்களிக்க வாய்ப்பு அதிகம் என்றும் நீண்டகாலமாக விமர்சனங்கள் நிலவுகின்றன. இந்நிலையில், கருத்துக்கணிப்புகளுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்எல்டி) கட்சி வலியுறுத்தியிருக்கிறது.

சமீபத்தில் உத்தர பிரதேச தேர்தல் ஆணையரைச் சந்தித்த அக்கட்சியின் தேசியச் செயலாளர் அனில் துபே, இதுதொடர்பாக ஒரு கோரிக்கை மனுவை அளித்திருக்கிறார். சமாஜ்வாதி கட்சி தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சி ஆர்எல்டி. கருத்துகணிப்புகளைத் தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்தி சமாஜ்வாதி கட்சியும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

x