கேரளாவில் கப்பல் மோதி மீனவர்கள் இறந்த விவகாரம்


தமிழக மீனவர்கள்

கேரளத்தில் கப்பல் மோதி விசைப்படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் உயிர் இழந்த சம்பவத்தில் கப்பல் போக்குவரத்து அமைச்சகம், முதற்கட்ட விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கடந்த 2021-ம் வருடம் ஏப்ரல் 13-ம் தேதி அதிகாலை சுமார் 1 மணிக்கு, கர்நாடகா மாநிலத்தின் மங்கலாபுரம் கடலில் சுமார் 42 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ‘ரஃபா’ என்ற விசைப்படகின்மீது சிங்கப்பூரிலிருந்து மும்பைக்கு சென்றுகொண்டிருந்த ‘ஏபிஎல் லே ஹாவ்ரே’ என்ற சரக்கு கப்பல் மோதியது. இந்த விபத்தில் 6 மீனவர்கள் உயிரிழந்தனர். இரு மீனவர்கள் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 6 மீனவர்கள் பற்றிய எவ்வித தகவல்களும் இதுவரை இல்லை. இவர்கள் கேரளத்தைத் தங்குதளமாகக் கொண்டு மீன்பிடித் தொழில் செய்துவந்தவர்கள்.

இந்தக் கப்பல் விபத்து பற்றி உரிய விசாரணை நடத்தவும், ஆழ்கடலில் விசைப்படகுகள் மீது கப்பல்கள் மோதுவதால் ஏற்படும் இத்தகைய துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பாதுகாப்பான மீன்பிடித்தொழிலுக்கான சூழ்நிலை ஏற்படும் வகையில் தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டணி வேண்டுகோள் வைத்திருந்தார். அதன் பேரில் இப்போது மிக முக்கியமான மாற்றம் நிகழ்ந்துள்ளது.

ஜஸ்டின் ஆண்டனி

இதுகுறித்து மீனவர் வளர்ச்சி அறக்கட்டளைத் தலைவர் ஜஸ்டின் ஆண்டனி காமதேனு இணையதளத்திடம் கூறும்போது, “தற்போது மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சகத்திடமிருந்து எனக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் உள்துறை அமைச்சகத்தின் வழியாக பெறப்பட்ட தங்களது புகாரின் அடிப்படையில், இந்த விசயத்தை கப்பல் போக்குவரத்து பொது இயக்குநரகத்தின் கவனத்துக்கு கொண்டுசென்றோம். வணிக கடற்துறையின் முதன்மை அதிகாரியினால் பரிந்துரைக்கப்பட்ட அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணை அறிக்கையையும் எனக்கு அனுப்பியிருக்கிறார்கள். இந்த அறிக்கையின் பரிந்துரையின்படி கேரள அரசு பாதுகாப்பான மீன்பிடித் தொழிலுக்கான சூழ்நிலையை உருவாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகில்மோதி உயிருக்கும், உடமைக்கும் சேதம்விளைவித்த ‘ஏபிஎல் லே ஹாவ்ரே’ என்ற கப்பலின் இரண்டாம் நிலை அதிகாரியை விசாரித்தபோது, இந்த அதிகாரியின் நடவடிக்கைகள் ஒத்துழைப்புதருவதாக இல்லை. மேலும் அவரிடம் போதிய அறிவும் கண்காணிப்பு அதிகாரிக்கான திறமையும், தொழில்முறை புத்திசாலித்தனமும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் கடமை தவறிய அதிகாரி குழுவினர் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்குப் பயன்படுத்தும் விசைப்படகுகளில் ஏ.ஐ.எஸ். கருவிகள் பொருத்தப்படவேண்டும். இது மீனவர்களின் பாதுகாப்புக்கு மிகவும் அவசியமாகும். ஆனால், இச்சம்பவத்தில் ‘ரஃபா’ விசைப்படகில் இந்த ஏ. ஐ.எஸ். கருவி பொருத்தப்படவில்லை. இந்த கருவி அனைத்து விசைப்படகுகளிலும் பொருத்தப்படுவதை கேரள அரசு உறுதி செய்து செயல்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ‘ரஃபா’ விசைப்படகில் சென்ற மீனவர்கள் பற்றிய முழு தகவல்கள் இல்லை. மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் பற்றிய முழுத் தகவல்களும் சேகரிக்கப்பட வேண்டுமென்ற விதியும் இதில் மீறப்பட்டுள்ளது எனவும் விசாரணை அதிகாரிகள் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்கள்’’ என்கிறார் ஜஸ்டின் ஆண்டனி.

விபத்து நடந்த பத்துமாதங்களுக்குப் பின்பு, விசாரணை தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

x