“தேஜஸ்வி தேசியத் தலைவரா.. எந்த முட்டாள் சொன்னது?” -சீறும் லாலு பிரசாத் யாதவ்


லாலு பிரசாத் யாதவ்

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் பிப்ரவரி 10-ல், பிஹார் தலைநகர் பாட்னாவில் நடைபெறவிருக்கிறது. இதில், முன்னாள் முதல்வரும், அக்கட்சியின் தேசியத் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரி தேவி, அவரது மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் லாலு பிரசாத் யாதவும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கட்சியின் தேசியத் தலைவராகத் தனது மகன் தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்களை லாலு பிரசாத் யாதவ் மறுத்திருக்கிறார். டெல்லியில் நேற்று (பிப்.5) செய்தியாளர்களிடம் பேசியபோது, “இப்படியான செய்திகளை வெளியிடுபவர்கள் முட்டாள்கள்” என்று அவர் காட்டமாகக் கூறினார்.

லாலுவின் மூத்த மகனான தேஜ் பிரதாபும் இந்தத் தகவல்களை மறுத்திருக்கிறார். “கட்சியின் தேசியத் தலைவராக என் தந்தை சிறப்பாகச் செயல்படுகிறார். எனவே, அவரே இந்தப் பதவியில் நீடிப்பார்” என அவர் கூறியிருக்கிறார்.

மாட்டுத் தீவன ஊழல் தொடர்பாக லாலு மீது தொடரப்பட்ட 5-வது வழக்கின் இறுதித் தீர்ப்பு, ராஞ்சியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் பிப்ரவரி 15-ல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கில் லாலு குற்றவாளி என அறிவிக்கப்பட்டால், அவர் மீண்டும் சிறை செல்ல வேண்டியிருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்த அனுமானத்தின் அடிப்படையிலேயே, கட்சியின் அடுத்த தேசியத் தலைவராகத் தேஜஸ்வி தேர்ந்தெடுக்கப்படலாம் எனச் செய்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.

x