பகுஜன் சமாஜ் கட்சியின் முதல் பெண் செய்தித் தொடர்பாளராகிறார் நிர்பயா வழக்கறிஞர்!


சீமா குஷ்வாஹா

நிர்பயா வழக்கிலும், உத்தர பிரதேசத்தின் ஹத்ரஸில் பட்டியலினச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கிலும், பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் ஆஜரான உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சீமா குஷ்வாஹா, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியில் கடந்த மாதம் இணைந்தார்.

இந்நிலையில், அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். கட்சித் தலைவர் மாயாவதியே நேரடியாக அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராக ஒரு பெண் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை.

இதுதொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில், பெண்களுக்கு நீதி கிடைக்க போராடுபவர் சீமா குஷ்வாஹா. கீழமை நீதிமன்றங்கள் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க அவர் முக்கியப் பங்காற்றிவருகிறார். சிறந்த வழக்கறிஞராக மட்டுமல்லாமல், சமூக சேவைகளையும் செய்துவருகிறார். மேற்கு உத்தர பிரதேசம், இட்டாவா, புந்தேல்கண்ட் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மவுரியா, சாக்கியா மற்றும் குஷ்வாஹா சமூகத்தினர் மத்தியில் நல்ல செல்வாக்கு கொண்டவராகவும் திகழ்கிறார். எதிர்காலத்தில் கட்சியின் மகளிர் பிரிவில் அவருக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜனவரி 20-ல் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்த சீமா குஷ்வாஹா, “நான் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. எனினும், எனக்குக் கட்சியில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படும்” எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

x