கோவிட், நிமோனியாவிலிருந்து மீண்டார் லதா மங்கேஷ்கர்!


லதா மங்கேஷ்கர்

பிரபல பாடகியான லதா மங்கேஷ்கர், அவரை பாதித்திருந்த கோவிட் மற்றும் நிமோனியா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோவிட் தொற்று தொடர்பான லேசான அறிகுறிகளுடன், தெற்கு மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் ஜன.8 அன்று லதா மங்கேஷ்கர் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருந்ததால் உடனடியாக ஐசியூ வார்டில் வைத்து பராமரிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு வெண்டிலேட்டர் வசதி பொருத்தப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் இந்தியா முழுவதிலுமிருந்து லதா மங்கேஷ்கரின் ரசிகர்கள், அவர் உடல்நலம் பெற பிரார்த்தனை மேற்கொள்ளத் தொடங்கினர்.

இந்த நிலையில் இன்று(ஜன.30) மதிய நிலவரப்படி, லதா மங்கேஷ்கர் உடல்நிலை சீராக உள்ளதாக மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார். ’ஐசியூ மற்றும் வென்டிலேட்டர் வசதிகள் இன்றி லதா மங்கேஷ்கருக்கு சிகிச்சைகள் தொடர்ந்து வருவதாக’வும் அவர் தெரிவித்தார்.

மேலும், ‘லதா மங்கேஷ்கர் தன்னை பாதித்திருந்த கோவிட் மற்றும் நிமோனியா பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். அவரது உடல் மருத்துவ சிகிச்சைக்கு சிறப்பாக உடன்பட்டு வருகிறது. ஆக்சிஜன் துணையுடன் தற்போது மருத்துவ பராமரிப்பில் இருந்து வருகிறார்’ என்றும் ராஜேஷ் டோப் தெரிவித்தார்.

92 வயதாகும் லதா மங்கேஷ்கர், இந்தி மட்டுமன்றி இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

x