1000 ட்ரோன்களின் ஒளி ஜாலம்: முப்படை பாசறை திரும்பலில் புது நிகழ்வு!


டெல்லியில் நடைபெற்ற முப்படைகளின் பாசறை திரும்பல் நிகழ்வில், இந்தியாவில் தயாரான 1000 ட்ரோன்களைக் கொண்டு வானில் மின்னொளி நிகழ்வும் முதல் முறையாக அரங்கேறியது.

73வது குடியரசு தினத்துக்கான விழா ஜன.23 அன்று, சுதந்திர போராட்ட முன்னோடி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை முன்னிட்டு தொடங்கியது. அதேபோல குடியரசு விழாவின் நிறைவாக, முப்படைகளும் பாசறை திரும்பும் நிகழ்வும் இன்று(ஜன.29) மாலை டெல்லி விஜய்சௌக்கில் நடைபெற்றது.

படைகள் பாசறை திரும்பல் என்பது பல நூற்றாண்டுகள் பாரம்பரியம் கொண்ட பெருமைக்குரிய நிகழ்வாகும். போர்க்காலத்தில் பொழுது நிறைந்ததும், இசையொலிக்க வீரர்கள் பாசறைக்கு திரும்புவார்கள். அதே நிகழ்வு குடியரசு விழாவின் நிறைவு விழாவாகவும் நடைபெறுகிறது.

நடப்பாண்டு நாடு சுதந்திரமடைந்ததன் 75வது ஆண்டினை முன்னிட்டு பல புதுமையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் முதன்மையானதாக முப்படைகள் பாசறை திரும்பலை முன்னிட்டு 1000 ட்ரோன்கள் வானில் கூடி, வர்ணனை மற்றும் இசைக்கு இணங்க உருவங்களை சித்தரித்தும், வர்ணங்களை வாரியிறைத்தும் பார்வையாளர்களுக்கு பரவசம் தந்தன.

1000 ட்ரோன்களை கொண்டு நடத்தப்பட்ட, மின்னொளி வர்ணஜால நிகழ்ச்சி குடியரசு தின வரலாற்றில் முதல் நிகழ்வாகும். முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களைக் கொண்டு, டெல்லி ஐஐடி நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆதரவில் இந்த நிகழ்ச்சி நடந்தேறியது. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவைத் தொடர்ந்து உலகளவில் இந்த நிகழ்வினை அரங்கேற்றும் நான்காவது தேசமாக இந்தியா பெருமை கொண்டுள்ளது.

முப்படைகளின் தலைவரான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக விஜய்சௌக்கில் மூவர்ண தேசியக் கொடி கீழிறக்கப்பட்டது. ராணுவத்தின் 26 பேண்ட் வாத்திய இசைக்குழுவினர் அணி வகுத்தனர்.

இசை நிகழ்ச்சியை கமாண்டர் விஜய் சார்லர் டி’க்ருஸ் முன்னின்று நடத்தினர். மகாத்மாவின் விருப்பப் பாடலான ’அபைட் வித் மீ’ நீக்கப்பட்டு, ஏ மேரே வதன் கே லோ கோங்’ என்ற பாடல் சேர்க்கப்பட்டிருந்தது. வழக்கம்போல ’சாரே ஜஹான் சே அச்சா’ உடன் விழா நிறைவுற்றது.

x