17,277 பேரும் கரோனாவால் மரணம்: தீர்ப்பு கொடுத்த நீதிமன்றம்


கரோனா வைரஸ்

கேரளத்தில் 3-வது அலை மிகத்தீவிரமாகப் பரவிவருகிறது. தொற்றுப் பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் நீட்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கேரளத்தில் கரோனாவால் உயிரிழந்த பலருக்கு கரோனாவால் மரணித்ததற்கான சான்றிதழ்கள் கிடைக்கவில்லை. அவர்கள் நீதிமன்றம் வழியே முறையீடு செய்து சான்றிதழ்பெற கேரள அரசு வழிவகை செய்தது. இதன்மூலம் மட்டும் கேரளத்தில் 17,277 பேர் கரோனா மரணம் என சான்றிதழ் பெற்றுள்ளனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்

கரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையின்போது கேரளத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். ஆனால் கேரள அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து இறந்தோரையும், கரோனா வைரஸ் தொற்று பாசிட்டிவாக இருக்கும்போது இறந்தவர்களும் மட்டுமே கரோனா வைரஸ் தொற்றால் இறந்ததாகப் பதிவு செய்தது. ஆனால், 2-வது அலையில் கரோனா வைரஸ் தொற்று நெகட்டிவாகி, அதன் பின்னர் கரோனாவின் தாக்கத்தினால் வேறு உடல் உறுப்புகள் பாதிப்படைந்து இறந்தவர்களும் உண்டு. அவர்களின் குடும்பத்தினர் கேரள அரசு, கரோனா வைரஸ் தொற்றில் இறந்தவர்களின் பட்டியலை முறையாகச் சேகரிக்கவில்லை என புலம்பி வந்தனர்.

இந்நிலையில் தான் மத்திய அரசு, கரோனாவால் உயிரிழந்த அனைவரது குடும்பத்துக்கும் 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கேரள அரசு, கரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி, தொற்று நெகட்டிவ் வந்து ஒருமாதத்துக்குள் இறப்பு நிகழ்ந்திருந்தாலும் அது கரோனா மரணமாகக் கருதப்படும் எனவும், இதுதொடர்பாக நீதிமன்றங்களில் முறையீடு செய்து அதன்வழியாக சான்றிதழ் பெறலாம் எனவும் வழிவகுத்தது. இதன் மூலம் மட்டுமே கேரளத்தில் கரோனாவால் உயிர் இழந்ததாக 17,277 பேர் சான்றிதழ் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

x