வேலையில்லாத் திண்டாட்டம்: விரைந்து தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை!


பெருந்தொற்றுக் காலத்தில் முடங்கியிருந்த தொழில் உற்பத்தித் துறை, சேவைத் துறை ஆகியவை மீட்சி பெற்றுவிட்டன. விவசாயத் துறை நெருக்கடியான காலகட்டத்திலும் தொடர்ந்து செயல்பட்டு நாட்டின் பிரச்சினைகள் தீவிரம் அடையாமல் காப்பாற்றியது. ஆனால் தொழில் துறை, சேவைத் துறை ஆகியவற்றிலும் மேலும் பல பிரிவுகள் முழுதாகச் செயல்படத் தொடங்கிவிடவில்லை. சர்வதேச வாணிபம், கப்பல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து ஆகியவை முடங்கிய நிலையில்தான் இருக்கின்றன. எல்லா நாடுகளும் உடனடியாக கவனிக்க வேண்டிய பிரச்சினையாக வேலையில்லாத் திண்டாட்டம் உருவெடுத்து வருகிறது.

பிஹார் தலைநகர் பாட்னாவில், ரயில்வே வாரியம் நடத்திய வேலைவாய்ப்புத் தேர்வில் பங்குகொண்ட இளைஞர்கள் அதன் முடிவுகளை இணையதளத்தில் பார்த்துக் கொதித்துப் போய், அதில் நடந்த முறைகேடுகளைக் கண்டிக்கும் வகையில் ரயில் பெட்டிகளைக் கொளுத்தியும் ஊர்வலம் சென்றும் அரசுக்கு எதிராக முழக்கமிட்டும் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்தும் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

இளைஞர்களின் கோபம் முறைகேடுகளுக்காக மட்டுமல்ல, முதல் தேர்வில் எழுதித் தேறியவர்கள் மேலும் ஒரு தேர்வையும் எழுத வேண்டும் என்ற அடுத்த நிபந்தனையும் அவர்களை கோபத்தின் உச்சிக்குத் தள்ளியிருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் வேலையில்லாத் திண்டாட்டம் தீர்க்கப்பட முடியாததாக இருக்கிறது. கடந்த 7 ஆண்டுகளாக, மத்திய அரசு தனது செலவுகளையும் பொறுப்புகளையும் குறைத்துக்கொள்ளும் வகையில் காலிப் பணியிடங்களைக்கூட முழுதாக நிரப்புவதில்லை. அரசு இலாக்காக்கள் மட்டுமல்லாது, அரசுத் துறை நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் குறைந்துவருகின்றன.

தாராளப் பொருளாதார கொள்கைகள் அமலுக்குப் பிறகு, தனியார் துறை பெரு நிறுவனங்களும் நிரந்தர வேலைவாய்ப்பு முறையை ஒழித்துக்கட்டிவிட்டன. எல்லா நிலைகளிலும் எல்லாப் பொறுப்புகளுக்கும் ஒப்பந்த அடிப்படையில்தான் நியமனம் நடக்கிறது. இதனால் எவருமே நிம்மதியான, நிலையான வேலையைப் பெற முடிவதில்லை. வேலையிழப்பு அச்சம் பெரிதில்லை என்றாலும் நல்ல நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட்டோம், வேறு விவகாரங்களில் கவனம் செலுத்துவோம் என்ற நிலை முன்புபோல இல்லை. இதுதான், இன்றைய இந்திய இளைஞர்களில் பெரும்பாலானவர்களுக்கு மன அழுத்தமாகவும் உடல் ரீதியிலான பிரச்சினையாகவும் இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இதில் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும். நிரந்தர வேலைவாய்ப்பு முறையை மீண்டும் ஏற்படுத்த சட்டங்களை இயற்ற வேண்டும்.

5.30 கோடிப் பேருக்கு வேலையில்லை

இந்தியப் பொருளாதாரத்தைத் தொடர்ந்து கண்காணித்துவரும் மையத்தின் (சிஎம்ஐஇ) தரவுகளின்படி, 2021 டிசம்பரில் இந்தியாவில் வேலைவாய்ப்பில்லாதவர்களின் எண்ணிக்கை 5.30 கோடி. இவர்களில் 3.5 கோடிப் பேர் தீவிரமாக வேலை தேடுகிறவர்கள். 1.7 கோடிப் பேர் வேலை கிடைத்தால் பரவாயில்லை என்கிற ரகம். தீவிரமாக வேலை தேடும் 3.5 கோடிப் பேரில் 80 லட்சம் பேர் மகளிர். 1.7 கோடிப் பேரில் 90 லட்சம் பேர் மகளிர். இவர்கள் ஏன் தீவிரமாக வேலை தேடவில்லை என்றால், குடும்பச் சூழல் காரணமாக உள்ளூரிலேயே அல்லது வீட்டிலேயே அவர்களுடைய உதவி தேவைப்படுவதால் தீவிரமாகத் தேடுவதில்லையே தவிர, அவர்களுக்கும் வேலை அவசியம். ஆனால், வேலைவாய்ப்பு நிலையங்களில் வேலைக்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவில் இப்போது 7.9 சதவீதம் பேருக்கு வேலை அவசியம்.

பட்டப்படிப்பு, முதுகலைப் படிப்பு படித்தவர்களிடையே மட்டுமே இப்படிப் பதிவு செய்யும் பழக்கமும் அதை ஆண்டுதோறும் புதுப்பிக்கும் பழக்கமும் இருக்கிறது. எஞ்சியவர்கள் கிடைத்த வேலைக்குச் சென்றுவிட்டு பதிவைத் துண்டித்துக்கொள்வதால், இந்தப் புள்ளிவிவரம் எப்போதுமே உண்மை நிலையை உணர்த்துவதில்லை. தொழிற்சாலைகளிலும் சேவைத் துறையிலும் வேலை செய்துவந்தவர்கள் வேலையிழந்தால், உடனே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போய் பதிவு செய்வதில்லை, அப்படியொரு நடைமுறையும் இல்லை. பெருந்தொற்று காரணமாக உலக அளவில் வேலையிழந்தவர்கள் எண்ணிக்கை 2019-ல் 58 சதவீதமாகவும் 2020-ல் 55 சதவீதமாகவும் இருந்தது. இந்தியாவில் இது 38 சதவீதம் என்கிறது சிஎம்ஐஇ தரவு.

வேலையில்லாத் திண்டாட்டம் எது?

படித்துவிட்டு ஒருவர் வேலை தேடுகிறார், அவருடைய படிப்புக்கேற்ற வேலை கிடைப்பதில்லை என்றால், அது வேலையில்லாத் திண்டாட்டம் என்று கருதப்படுகிறது. இது நாட்டின் பொருளாதார நிலைமையை உணர்த்துகிறது. இதை சதவீதத்தில் எப்படி கணக்கிடுகிறார்கள் என்றால், மொத்தமாக வேலை தேடுகிறவர்கள் எண்ணிக்கையை, ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களின் எண்ணிக்கையால் வகுத்து, அதை நூறால் (100) பெருக்கி சதவீத கணக்குப் போடுகிறார்கள். ஏற்கெனவே வேலை செய்வோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், வேலையில்லாத் திண்டாட்ட சதவீதம் குறைவாகத் தெரிகிறது.

ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் பள்ளி, கல்லூரிகளில் படிப்பை முடித்து வருவோரில், வேலைக்கேற்ப வருகிறவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. எனவே, அனைவருக்கும் கல்வித்தகுதி அடிப்படையில் அல்லாமல், நிறுவனத்தார் நிர்ணயிக்கும் அளவுக்கே ஊதியம் தரப்படுகிறது. தொழிலாளர்களை அதிகம் பணிக்கமர்த்தி வேலை தந்த நிறுவனங்களின் எண்ணிக்கை குறைகிறது. இயந்திரங்களும் செயற்கை மனித மூளைகளும் தொழிலாளர்களைக் குறைக்கவே உதவுகின்றன.

இந்தியாவில் வேலைவாய்ப்புகள் குறைந்ததற்கு முக்கிய காரணம், பொருளாதாரம் மீட்சி பெற்றுக்கொண்டிருந்த காலத்தில், மத்திய அரசு சோதனை அடிப்படையில் கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நீக்க நடவடிக்கைதான். அப்போது வீழ்ந்த அல்லது மூடப்பட்ட நிறுவனங்கள் தலை தூக்குவதற்குள் அடுத்தடுத்து பல சோதனைகள் தொடர்ந்தன. இறுதியாக வந்த பெருந்தொற்று அவற்றில் லட்சக்கணக்கான பிரிவுகளை நிரந்தரமாக மூட வைத்துவிட்டது.

இந்தியாவில் வேலையில்லா இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை தரும் திட்டம் சில மாநிலங்களில் உள்ளது. ஆனால் அதற்கு நிபந்தனைகள் அதிகம். அதே சமயம் செய்துவந்த வேலையிலிருந்து நீக்கப்படுவோருக்கு உதவும் சமூகநல திட்டம் ஏதும் கிடையாது. இதனால் குடும்பங்கள் திடீரென வறுமை நிலைக்குத் தள்ளப்படுகின்றன. சமூக பாதுகாப்பு திட்டங்களை வகுக்கும்போது இவற்றுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

தமிழ்நாட்டில் வேலையின்மை

தமிழ்நாட்டில் 2020 பிப்ரவரியில் ஒட்டுமொத்தமாக இருந்த வேலையின்மை 1.17 சதவீதம். 2021 பிப்ரவரியில் அது 2.7 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. பட்டப்படிப்பு அதற்கும் மேலும் படித்தோரிடையே இந்த வேலைவாய்ப்பின்மை 16.87 சதவீதமாக இருக்கிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை அதற்குப் பிறகு பெருந்தொற்று ஆகியவை காரணமாக தமிழ்நாட்டில் சிறு, குறு தொழில் பிரிவுகளில் 80 சதவீதம் மூடப்பட்டுவிட்டன. எனவே, இவற்றால் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை பெற்றுவந்த லட்சக்கணக்கானவர்கள் வேலையிழந்துவிட்டனர்.

குறைந்தபட்ச ஊதிய சட்டம், வேலையில்லாத காலத்துக்கு உதவித் திட்டம் போன்றவற்றை அமல்படுத்தினால்தான் மக்களை வறுமையிலிருந்து காக்க முடியும். வேலையில்லாத் திண்டாட்டம் என்பது படித்துவிட்டு வேலை கிடைக்காதவர்களுடைய பிரச்சினை என்பதைப் போல, அரசும் தனியார் துறையும் ஒதுங்க நினைக்கக் கூடாது. இதற்கு கால வரம்புடன் கூடிய திட்டங்கள் அவசியம். மாவட்ட வாரியாக, தொழில்வாரியாக வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதும் அவசியம். வேலைவாய்ப்பகங்கள் வெறும் பதிவு அலுவலகங்களாக இல்லாமல், தொழில்களுக்குத் தேவைப்படும் திறன்களையும் தகுதிகளையும் கண்டறிந்து அரசுக்குத் தெரிவித்து இணைப்புப் பாலமாகவும் செயல்பட வேண்டும். குறுகிய கால பயிற்சிகள் மூலம் இளம் பட்டதாரிகளை பணிக்குத் தயார்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டுக்குள் மட்டும் வேலை தேடித்தருவதோடு நிற்காமல், அகில இந்திய அளவில் காலியாக இருக்கும் வேலைகள், உலக அளவில் தேவைப்படும் பணியாளர்கள் ஆகியவற்றையும் கண்டறிந்து அதற்கேற்ப பள்ளி, கல்லூரி பாடத் திட்டங்களையும் மாற்றியமைத்து முழுமையான வேலைவாய்ப்பு கல்வியாக அளிக்க வேண்டும்.

x