எப்போது வேண்டுமானாலும் மோடி அரசு கவிழலாம்: மல்லிகார்ஜுன கார்கே கருத்து


புதுடெல்லி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் பெரும்பான்மை பெறத் தவறியது.

இதனால் தனது கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் உள்ளிட்டோரின் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, “என்டிஏ அரசு தவறுதலாக அமைக்கப்பட்டு விட்டது. ஆட்சி அமைக்க மோடிக்கு மக்கள் உத்தரவு வழங்கவில்லை. இது ஒரு மைனாரிட்டி அரசு. இந்த அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம். ஆனால் நாங்கள் இந்த அரசு தொடர விரும்புகிறோம். ஸ்திரமான அரசு இருப்பதே நாட்டுக்கு நல்லது. நாட்டை வலுப்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். ஆனால் ஏதாவது நன்றாக சென்று கொண்டிருந்தால் பிரதமர் அதனை தொடர விடமாட்டார். என்றாலும் நாட்டை வலுப்படுத்த நாங்கள் ஒத்துழைப்போம்” என்றார்.

கே.சி. தியாகி கண்டனம்: இதுகுறித்து ஐக்கிய ஜனதா தளம் தலைவர் கே.சி.தியாகி கூறுகையில், “காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விரும்பத்தகாத கருத்துகளை கூறி நாட்டில் அராஜகம் மற்றும் நம்பிக்கையில்லா சூழலை உருவாக்க முயற்சிக்கிறார். இதை நான் கண்டிக்கிறேன்” என்றார்.

x