கரோனா தடுப்பூசிகளை இனி வெளிச்சந்தையிலும் பெறலாம்!


கோவாக்சின் - கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்துகள்

கரோனா தடுப்பூசிகளை இனி வெளிச்சந்தையிலும் பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்து ஓராண்டை நிறைவு செய்துள்ளன. பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் என 2 தடுப்பூசிகள், இந்தியாவின் பெருந்தொற்றுக்கு எதிரான போரில் களமாடின. இவை அறிமுகமான புதிதில் சாமானியருக்கும் எட்டாத விலையுடன், தட்டுப்பாடுகளுடன் தனியார் மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் நிற்கவைத்தன. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, குடிமக்களுக்கு இலவசமாகவே தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசு இறங்கி வந்தது. மேலும் வெளிநாடுகளுக்கான தடுப்பூசி ஏற்றுமதியையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

தற்போது தடுப்பூசி இயக்கம் கணிசமான அளவில் தனது இலக்கை எட்டியுள்ளது. 18 வயது நிரம்பியவர்களுக்கான தடுப்பூசிகள் மட்டுமன்றி, 15-18 வயதினருக்கான தடுப்பூசி மற்றும் 2 டோஸ் தடுப்பூசி பெற்றவர்களுக்கான பூஸ்டர் டோஸ் ஆகியவற்றையும் அரசு செயல்படுத்தி வருகிறது. தடுப்பூசி நிறுவனங்களும் தட்டுப்பாடின்றி உற்பத்தியை மேற்கொண்டு வருவதுடன், தயாரான தடுப்பூசிகளை முழுமையாக வெளிச் சந்தைக்கு கொண்டு செல்வதன் மூலம் அவை இருப்பில் தேங்குவதையும் தவிர்க்க முடிவுசெய்தன.

அதற்கேற்ப தடுப்பூசிகளின் வெளிச்சந்தை விற்பனை குறித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று(ஜன.27) விளக்கமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் அனுமதியின் பேரில், தற்போது வெளிச்சந்தை விற்பனைக்கும் கரோனா தடுப்பூசிகள் அனுமதிக்கப்படுகின்றன. அதாவது, மருத்துவமனை மற்றும் சிறு கிளினிக்குகளையும் அணுகி இனி கரோனா தடுப்பூசிகளை எளிதில் செலுத்திக்கொள்ள முடியும்.

அவசரகால பயன்பாட்டுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த இந்தத் தடுப்பூசிகளை, இதன்மூலம் இனி விரும்புவோர் வெளிச் சந்தையில் விலைகொடுத்து வாங்கிக்கொள்ளலாம். இந்த வகையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத சிறு சதவீதத்தினரையும், முழுமையாக அவை சென்றுசேர வாய்ப்பாகும். ஆனால், இந்த விற்பனைக்கு ஏராளமான கட்டுப்பாடுகளையும் மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு ஆணையம் விதித்துள்ளது. அவற்றுக்கு உட்பட்டே அவை சந்தையில் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

x