7வது ஊதியக்குழு சம்பள நிலுவையை உடனே வழங்கவும்!- குஷியில் அரசு ஊழியர்கள்


புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 25 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரை சம்பளத்தில், எட்டுமாத நிலுவைத் தொகை கிடைக்க உள்ளதால் அவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனால், அரசுக்கு ரூ.150 கோடி செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். கடந்தாண்டு காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததால் மத்திய அரசே நேரடியாக 5 மாத இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி பொறுப்பேற்று, ரூ.9,924.41 கோடிக்கு வரியில்லா பட்ஜெட்டை முதல்வரும், நிதியமைச்சருமான ரங்கசாமி கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி தாக்கல் செய்தார்.

இந்நிலையில், புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 1.1.2016 முதல், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு கூறியிருந்தது. இதையடுத்து, புதுச்சேரி அரசு 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்தியது. 2016 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான எட்டு மாதங்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை தொகை வழங்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில், நிலுவை தொகையை இந்த ஆண்டிற்கான திருத்திய பட்ஜெட்டிலேயே செட்டில் செய்ய நிதித்துறை அறிவுறுத்தி உள்ளது. இதனால், ஏழாவது ஊதியக்குழுவின் 8 மாத நிலுவைத் தொகை , 6 ஆண்டுகளுக்கு பிறகு கிடைப்பது உறுதியாகி உள்ளதால், அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம், மாநிலம் முழுவதும் 25 ஆயிரம் அரசு ஊழியர்கள் பயனடைவர். இதனால், அரசுக்கு ரூ.150 கோடி வரை கூடுதல் செலவாகும் என்று கூறப்படுகிறது.

x