வங்க தேச எல்லையில், போதுமான நிலங்கள் இல்லை என்பதால் பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் பணி சவால்கள் நிறைந்ததாக இருப்பதாக, தெற்கு வங்க எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) ஐஜி-யான அனுராக் கர்க் கூறியிருக்கிறார். இதனால், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் கண்காணிப்புப் பணிகளும் சவால் மிகுந்ததாக இருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இதுதொடர்பாக, ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அனுராக் கர்க், “வங்காளம் பரந்துவிரிந்த பகுதி ஆகும். சுந்தரவனக் காடுகள் தொடங்கி மால்டா வரை தெற்கு வங்கம் பரந்துவிரிந்திருக்கிறது. எல்லையில் பாதுகாப்பு வேலிகளை அமைக்கும் பணியை மேற்கொள்ள முயற்சித்தோம். ஆனால், போதுமான நிலம் இல்லாததால் எங்களால் அந்தப் பணியைத் தொடர முடியவில்லை” என்று கூறியிருக்கிறார்.
பொதுவாக, பாதுகாப்பு வேலிகளை அமைக்கும் பணிக்கு 150 மீட்டர் நிலம் தேவைப்படும். ஆனால், வங்கதேச எல்லைப் பகுதியில் கிராமங்கள் இருப்பதால், வேலிகளை நடுவதற்குத் தேவையான இடம் கிடைப்பதில் சிரமம் இருக்கிறது. இதுகுறித்துப் பேசிய அனுராக் கர்க், “வங்காளிகள் யார், வங்கதேசத்தவர் யார் என்பதைக் கண்டறிவது கடினமாக இருக்கிறது. எல்லையில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் நடப்பது, வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையையும் (பிஜிபி) கவலையடையச் செய்திருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
வேலிகளை அமைக்க நிலங்களை வழங்குவது மேற்கு வங்க மாநிலத்தின் பொறுப்பு. இவ்விஷயத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஒத்துழைப்பு குறித்து விளக்கமளித்த அனுராக் கர்க், “நிலம் வழங்குவதில் மேற்கு வங்க அரசுத் தரப்பிலிருந்து எவ்வித முட்டுக்கட்டையும் எழவில்லை. எனினும், எல்லைப் பகுதிகளில் வசிப்பவர்கள் அரசுக்குத் தங்கள் நிலங்களை வழங்க முன்வரவில்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
எல்லைப் பகுதி என்பதால், வாகனத் தணிக்கைகளில் பிஎஸ்எஃப் தீவிரமாக ஈடுபடுகிறது. குறிப்பாக, சரக்கு வானங்கள் முழுமையாகச் சோதனையிடப்படுகின்றன. அதில் போலி உரிமத்துடன் உள்ளே வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. உள்ளூர் காவல் துறையினரிடம் இதுதொடர்பாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத நிலவரப்படி, இந்திய - வங்கதேச எல்லையில் 76 சதவீதம் பகுதிகளில் பாதுகாப்பு வேலிகள் அமைப்புக்கும் பணிகள் நிறைவுபெற்றிருப்பதாக, மத்திய உள் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. திரிபுரா மாநிலத்தில், வங்கதேச எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.