இந்திய ஆட்சிப் பணி விதிகள் திருத்தம், மாநில அரசுகளின் செயல்பாட்டில் தலையிடும் முயற்சி!


அகில இந்திய ஆட்சிப் பணி விதிகள் 1954-ல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானவை என்றும் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

“இந்தத் திருத்தங்கள், பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களின் கொள்கைகளை அமல்படுத்தும் விஷயத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் பயத்தையும் தயக்கத்தையும் ஏற்படுத்தும். அது கூட்டுறவுக் கூட்டாட்சியைப் பலவீனப்படுத்தும்” என்று கேரள முதல்வர் பினராயி விஜயனும் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவும், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் தனது எதிர்ப்பைப் பதிவுசெய்திருக்கிறார். இந்தக் கடிதத்தில், “கூட்டாட்சி குறித்து நமது அரசமைப்புச் சட்டம் கூறும் உணர்வுக்கு நேர்மாறான முயற்சி இது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகளின் அகில இந்திய சேவை குணத்தில் இது பாதிப்பை ஏற்படுத்தும். அரசியல் சாசனக் கட்டமைப்பு மற்றும் கூட்டுறவுக் கூட்டாட்சி ஆகியவற்று எதிரான ஆபத்தான முயற்சி” எனக் கண்டித்திருக்கிறார் தெலங்கானா முதல்வர்.

மேலும், “இந்தத் திருத்தங்களை மத்திய அரசு அமல்படுத்தினால், அது முக்கியத்துவம் இல்லாதவையாக மாநில அரசுகளை மதிப்பிழக்கச் செய்யும். மாநில அரசுகளில் பணிபுரியும் அதிகாரிகள் மீது மறைமுகமாக அதிகாரம் செலுத்தும் முயற்சி இது. மாநில அரசுகளின் செயல்பாட்டில் தலையிடுவதற்கு நிகரானதும்கூட” எனக் குறிப்பிட்டிருக்கும் சந்திரசேகர் ராவ், இந்த முயற்சியைக் கைவிடுமாறும் மத்திய அரசிடம் கோரியிருக்கிறார்.

x