நேதாஜியின் ஹாலோகிராம் சிலை: திறந்துவைத்தார் பிரதமர் மோடி!


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளையொட்டி அவரது உருவத்தைப் பிரதிபலிக்கும் ‘ஹாலோகிராம்’ சிலையை, டெல்லியில் உள்ள இந்தியா கேட் அருகே பிரதமர் மோடி இன்று மாலை திறந்துவைத்தார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்ததினத்தையொட்டி, பேரிடர் மேலாண்மையில் சிறப்பாகப் பங்களித்த தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் ‘ஆப்தா பிரபந்தன் புரஸ்கார்’ விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், இன்று மாலை, டெல்லியில் நடைபெறும் குடியரசுத் தினவிழாக் கொண்டாட்டத்தின் தொடக்க விழாவின்போது பிரதமர் நரேந்திர மோடி விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார். குஜராத் பேரிடர் மேலாண்மை நிறுவனமும் (ஜிஐடிஎம்), பேராசிரியர் வினோத் சர்மாவும் இந்த விருதுகளைப் பெறுகின்றனர். இந்த விருதைப் பெறும் நிறுவனங்களுக்கு 51 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் சன்றிதழும் வழங்கப்படும். தனிநபர்களுக்கு 5 லட்ச ரூபாயும் சான்றிதழும் வழங்கப்படும். மொத்தம் 7 விருதுகள் இந்நிகழ்ச்சியில் வழங்கப்படுகின்றன.

டெல்லியின் இந்தியா கேட் அருகே, கிரானைட் கற்களைக் கொண்டு பிரம்மாண்டமான நேதாஜி சிலை அமைக்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அந்தச் சிலை நிறுவப்படும் வரையில், நேதாஜியின் உருவத்தைப் பிரதிபலிக்கும் ‘ஹாலோகிராம்’ நிலை நிறுவப்படுகிறது. இன்றைய நிகழ்வில் பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

முப்பரிமாண ஒளிப்படவியல் தொழில்நுட்பமான ‘ஹாலோகிராம்’ மூலம் உருவாக்கப்படும் இந்தச் சிலை 28 அடி உயரமும், 6 அடி அகலமும் கொண்டது.

x