பாஜக கூட்டணிக் கட்சி சார்பில் முஸ்லிம் வேட்பாளர்!


பிரதமர் மோடியுடன் அனுப்ரியா படேல்

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அப்னா தளம் (எஸ்) சார்பில், ஒரு முஸ்லிம் வேட்பாளர் நிறுத்தப்படுவது கவனம் ஈர்த்திருக்கிறது. இந்தத் தேர்தலில் அனுப்ரியா படேல் தலைமையிலான அப்னா தளம் (எஸ்) கட்சி, சஞ்சய் நிஷாத் தலைமையிலான நிஷாத் கட்சி ஆகியவற்றுடன் பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.

இந்நிலையில், மேற்கு உத்தர பிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள சுவார் தொகுதியில் அக்கட்சி சார்பில், ஹைதர் அலி கான் எனும் வேட்பாளர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை இரு கட்சிகளுக்கும் இடையில் தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரபூர்வத் தகவல் எதுவும் வரவில்லை. கடந்த முறை தங்கள் கட்சிக்கு 11 இடங்கள் ஒதுக்கப்பட்டதாகவும், இந்த முறை அதைவிட அதிக எண்ணிக்கையில் இடங்களைக் கேட்டிருப்பதாகவும் அனுப்ரியா படேல் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. உத்தர பிரதேசத் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளரை பாஜக களமிறக்குவது அரிது என்பதால், அதன் கூட்டணிக் கட்சியின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

ஹைதர் அலி கான் முதலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இதற்கிடையில் டெல்லி சென்று அனுப்ரியா படேலைச் சந்தித்த பின்னர் முடிவை மாற்றிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

x