பேரிடர் மேலாண்மையில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு ‘ஆப்தா பிரபந்தன் புரஸ்கார்’ விருதுகள்!


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்ததினத்தையொட்டி, பேரிடர் மேலாண்மையில் சிறப்பாகப் பங்களித்த தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் ‘ஆப்தா பிரபந்தன் புரஸ்கார்’ விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், இன்று மாலை, டெல்லியில் ந்டைபெறும் குடியரசுத் தினவிழாக் கொண்டாட்டத்தின் தொடக்க விழாவின்போது பிரதமர் நரேந்திர மோடி விருதுகளை வழங்கி கவுரவிப்பார்.

குஜராத் பேரிடர் மேலாண்மை நிறுவனமும் (ஜிஐடிஎம்), பேராசிரியர் வினோத் சர்மாவும் இந்த விருதுகளைப் பெறுகின்றனர். இந்த விருதைப் பெறும் நிறுவனங்களுக்கு 51 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் சன்றிதழும் வழங்கப்படும். தனிநபர்களுக்கு 5 லட்ச ரூபாயும் சான்றிதழும் வழங்கப்படும்.

2012-ல் நிறுவப்பட்ட ஜிஐடிஎம் நிறுவனம், பேரிடர் பாதிப்பைக் குறைக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறது. இதில், 12,000-க்கும் மேற்பட்டோருக்கு இந்நிறுவனம் பயிற்சியளித்திருக்கிறது.

இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் மூத்த பேராசிரியரும் சிக்கிம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் துணைத் தலைவருமான பேராசிரியர் வினோத் சர்மா, தேசிய பேரிடர் மேலாண்மை மையத்தை நிறுவியவர்களில் ஒருவர் ஆவார். இம்மையம் தற்போது தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் என அழைக்கப்படுகிறது.

நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் வழக்கமாக, ஜனவரி 24-ம் தேதி முதல்தான் குடியரசு தினக் கொண்டட்டங்கள் தொடங்கும். ஆனால், சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளையொட்டி, முதன்முறையாக ஜனவரி 23-ம் தேதியே குடியரசு தினக் கொண்டாட்டங்களைத் தொடங்க மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.

டெல்லியின் இந்தியா கேட் அருகே, கிரானைட் கற்களைக் கொண்டு பிரம்மாண்டமான நேதாஜி சிலை அமைக்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அந்தச் சிலை நிறுவப்படும் வரையில், நேதாஜியின் உருவத்தைப் பிரதிபலிக்கும் ‘ஹாலோகிராம்’ சிலை நிறுவப்படுகிறது. அதையும் இன்றைய நிகழ்வில் பிரதமர் மோடி திறந்துவைக்கவிருக்கிறார்.

x