தந்தை உறவு சொத்தில் பெண்களுக்கும் உரிமை உண்டு!


1956ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வாரிசு உரிமை சட்டத்திற்கு முன்னதாக இறப்பு ஏற்பட்டிருந்தாலும் தந்தை உறவு சொத்தில் மகள்களுக்கு உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த அருணாச்சலா என்பவர் பெண் வாரிசுகளுக்கு தந்தையின் சொத்து வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், "ராமசாமி என்பவரின் அண்ணன் மாரப்பா கடந்த 1949ம் ஆண்டு இறந்துவிட்டார். மாரப்பாவின் மகளும் இறந்துவிட்ட நிலையில் அவரது குடும்ப சொத்துக்கள் அனைத்தும் தம்பி வாரிசான ஆண் பிள்ளைகளுக்கு மட்டுமே சேரும் என உரிமை கோருகிறேன். சொத்தில் பெண்களுக்கு உரிமை இல்லை. 1956ம் ஆண்டு வாரிசு உரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது என்பதால் அதற்கு முன்பாகவே மாரப்பா இறந்துவிட்டதால் அவருடைய தம்பி மகள்களுக்கும் சொத்தில் உரிமை உண்டா என நீதிமன்றம் விளக்கம் அளிக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாரப்பா இறந்ததுமே சொத்து முழுவதும் அவருடைய மகளான குப்பாயம்மாளுக்கு சென்றுவிட்டது. அவரும் இப்போது உயிருடன் இல்லாததால் தற்போதுள்ள சொத்துக்கள் அனைத்திலும் மாரப்பாவின் தம்பி மகன்களுக்கு மட்டுமின்றி அவருடைய மகள்களுக்கும் உரிமை உண்டு. மேலும், 1956ம் ஆண்டு வாரிசு உரிமை சட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில் அதற்கு முன்பாக இறப்பு ஏற்பட்டிருந்தாலும் தந்தை உரிமை சொத்தில் பெண்களுக்கும் உரிமை உண்டு. 1956ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்து வாரிசு உரிமை சட்டத்தின் பிரிவில் 2005ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி மகள்களுக்கும் சொத்துரிமை அளிக்கப்பட்டது" என்று கூறினர்.

x