’குடும்பத்திற்கு ஒருவர்’ - வாரிசு போட்டிக்கு பாஜக நிபந்தனை!


ரீட்டா பகுகுணா ஜோஷி

தேர்தலில் போட்டியிட முன்வரும் அரசியல் வாரிசுகளுக்கு ‘குடும்பத்திற்கு ஒருவர்’ என பாஜக நிபந்தனை விதித்துள்ளது. இதை ஏற்று உத்தரப்பிரதேசத்தில் தன் மகனுக்கு வாய்ப்பளிக்க, எம்.பி பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளார் 72 வயதான டாக்டர்.ரீட்டா பகுகுணா ஜோஷி.

உபி முன்னாள் காங்கிரஸ் முதல்வரான ஹேம்வதி நந்தன் பகுகுணாவின் மகள் ரீட்டா பகுகுணா ஜோஷி. தந்தையின் கட்சியான காங்கிரசில் இருந்தவர் 1995 முதல் 200 வரை அலகாபாத் மேயராக இருந்தார். பிறகு 2003 முதல் 2012 வரை உபி காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். 2014 மக்களவை தேர்தலில் தலைநகரான லக்னோ தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனால், 2016ல் பாஜகவில் இணைந்தவர், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அலகாபாத்தின் மக்களவை எம்.பியானார்.

இவரது மகனான மயாங் மிஸ்ராவும் கடந்த பத்து வருடங்களாகப் பாஜகவில் உள்ளார். இதனால், இந்தமுறை சட்டப்பேரவை தேர்தலில் மகன் மயாங்கிற்கு போட்டியிட வாய்ப்பு கேட்டு வருகிறார் ரீட்டா. இதற்காக அவர் டெல்லியிலுள்ள தனது அரசு குடியிருப்பில் பத்து நாள் தங்கி பாஜக தலைவர்களை சந்தித்து வந்தார். இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பலரையும் சந்தித்தார். இந்த சமயத்தில் ரீட்டாவிற்கு கரோனா தொற்றும் ஏற்பட்டது.

எனினும், அவரது மகன் மயாங் மிஸ்ராவிற்கு வாய்ப்பு கிடைத்தபாடில்லை. இதற்கு, மயாங் போன்ற அரசியல் வாரிசுகளுக்கு, ‘குடும்பத்திற்கு ஒருவர்’ என பாஜக நிபந்தனை விதித்துள்ளது. இதன்படி, ஏற்கெனவே, ரீட்டா எம்.பியாக உள்ளதால், மகன் மயாங்கிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக மிகவும் கவலைகொண்ட ரீட்டா, இந்த தேர்தலில் தனது மகனுக்கு சீட் வாங்க தீவிர முயற்சி செய்து வருகிறார்.

தன் மகனுக்காக எம்.பி பதவியையும் துறக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதன்மூலம், கட்சியின் நிபந்தனைக்கு உட்படுவதாகவும் அவர் பாஜக தலைவர்களிடம் எடுத்துரைப்பதாகவும் கருதப்படுகிறது. உபியில் பிப்ரவரி 14 முதல் தொடங்கி ஏழுகட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல்கட்டத்திற்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. மீதம் உள்ள ஆறு கட்ட தேர்தலில் ரீட்டாவின் கோரிக்கை ஏற்று மகன் மயாங்கிற்கு பாஜக வாய்ப்பளிக்குமா? என்பது வரும் நாட்களில் தெரியும்.

x