சட்டப் பல்கலைக்கழகங்களில் முறையான இட ஒதுக்கீடு பின்பற்றுக!


முதல்வருடன் வில்சன் எம்பி

நாடு நெடுகிலும் உள்ள சட்டப் பல்கலைக்கழகங்களில் முறையான இட ஒதுக்கீடு முறைகளை பின்பற்றுமாறு. திமுக மாநிலங்களவை எம்பியான வில்சன் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கு கடிதம் எழுதியிருக்கும் எம்பி வில்சன், முறையான இட ஒதுக்கீடு நடைமுறைகளை பின்பற்றாத சட்டப் பல்கலைக்கழகங்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

திமுக எம்பியும், வழக்கறிஞருமான வில்சன், நாட்டின் சட்டப் பல்கலைக்கழகங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்தான தரவுகளை சேகரித்து வருகிறார். முன்னதாக திமுகவின் சட்டப் போராட்டத்தின் விளைவாகவே மருத்துவ பட்டப்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில், ஓபிசி பிரிவு மக்களுக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு, உச்ச நீதிமன்றம் வாயிலாக உறுதி செய்யப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டும் வில்சன், இதேபோன்று சட்டப் பல்கலைக்கழகங்களிலும் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதையும் கண்காணித்து வருகிறார்.

இவை தொடர்பாக மத்திய அரசின் கல்வித் துறை, சட்டம் மற்றும் நீதித் துறை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை ஆகியவற்றின் அமைச்சர்கள் மற்றும் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், சட்டப் பல்லைக்கழக துணைவேந்தர்கள் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அனைத்து சட்டப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றுவது அரசியலமைப்பு சட்டத்தின்கீழ் கட்டாயமானது என்பது உட்பட, பலவற்றையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பெரும்பாலான மாநிலங்களில் உள்ள சட்ட பல்லைக்கழகங்கள், தேசிய சட்டப்பள்ளிகள் ஆகியவற்றில் அரசியலமப்பு அடிப்படையிலான இட ஒதுக்கீடோ, மாநில இட ஒதுக்கீடோ முறையாக பின்பற்றப்படவில்லை என்பதையும் தரவுகளுடன் வெளிப்படுத்தி வருகிறார். உரிய இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை எனில், அதையொட்டிய சட்ட விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அந்த கடிதங்களில் சுட்டிக்காட்டி உள்ளார்.

x