இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம்!


பிரதமர் மோடி

"இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம்" என உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

உலக பொருளாதார கூட்டமைப்பு, ஆண்டுதோறும் தனது மாநாட்டை சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் கடந்த 50 ஆண்டுகளாக நடத்தி வந்தது. ஆனால், கரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு இந்த மாநாட்டை நடத்த முடியவில்லை. இந்த ஆண்டு கோடைகாலத்துக்கு இம்மாநாடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த ஆண்டுக்கான மாநாடு காணொலி வாயிலாக 5 நாள் நடத்த உலக பொருளாதார கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆண்டுக்கான மாநாடு ‘டாவோஸ் செயல்திட்ட மாநாடு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலக பொருளாதார கூட்டமைப்பின் உச்சிமாநாடு நேற்று தொடங்கியது. சீன அதிபர் ஜி ஜின் பிங்கின் சிறப்புரையுடன் இந்த மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் பங்கேற்றார். இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, "உலகின் மிகவும் கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாக இந்தியாவை உருவாக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம். இந்திய இளைஞர்கள் தொழில்புரிவதற்கான ஆர்வத்தில் உள்ளனர். புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கவும், அதை ஏற்றுக்கொள்ளவும் ஆர்வமாக உள்ளனர். உலகுக்கே சேர்த்து இந்தியாவில் தயாரிப்போம். மருத்துவம், தொழில்நுட்ப புரட்சியை நோக்கி பயணிப்போம். மேலும் கிரிட்டோகரன்சி சிக்கலை தீர்க்க உலக நாடுகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும்’ என்று கூறினார்.

x