வட இந்தியத் தேர்தல் களத்திலும் கோலோச்சும் இலவச அறிவிப்புகள்!


தேர்தல் காலத்தில் விதவிதமான வாக்குறுதிகளுடன் அரசியல் கட்சிகள் களமிறங்கும். வெற்றி பெறும் கட்சிகள் அவற்றை நிறைவேற்றாவிட்டால் மறுதேர்தலில் தோல்வி அடையும் சூழல் இருந்தது. பெரும்பாலும் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில்தான் இலவச அறிவிப்புகள் தேர்தல் அறிக்கைகளில் அதிகம் இடம்பெறும். இந்த நிலை முதன்முறையாக வட மாநிலத் தேர்தல்களின் முக்கியப் போக்காகவும் இலவச அறிவிப்புகள் மாறியுள்ளன. பொதுமக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் இந்த முறை பின்னுக்குத் தள்ளப்பட்டு இலவசங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதைப் பார்க்க முடிகிறது. ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் இலவசங்களையே பிரதானமாக முன்னிறுத்தி வருகின்றனர் அரசியல் கட்சித் தலைவர்கள்.

அகிலேஷ் யாதவ்

குறிப்பாக 403 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் இலவசங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. 2012 முதல் ஐந்தாண்டுகள் ஆட்சி செய்த சமாஜ்வாதி முதல்வர் அகிலேஷ் யாதவ் இலவசங்களைத் தொடங்கி வைத்திருந்தார். இந்தத் தேர்தலிலும் அவர், தேர்தல் வாக்குறுதியில் பல இலவசங்களை அறிவித்துள்ளார். 2017-ல் ஆட்சிக்கு வந்த பாஜக, இலவசங்களில் அகிலேஷைவிட ஒருபடி மேலே போனது.

உத்தர பிரதேச முதல்வரான யோகி ஆதித்யநாத், மாணவர்களுக்கு கணினி டேப்லெட்டுகளை இலவசமாக வழங்கினார். பொதுமக்களுக்கு 300 யூனிட்டிற்கான மின்சாரக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். முதியோர் உதவித்தொகையை மும்மடங்கு உயர்த்தியதுடன், விவசாயிகளுக்குப் பாசன வசதிக்காக இலவச மின்சாரத்தையும் அறிவித்தார். இந்த இரண்டு கட்சிகளாலும் உத்தர பிரதேசத்தில் பின்னடைவைச் சந்தித்த காங்கிரஸும் இலவசங்களைக் கையில் எடுத்துள்ளது.

யோகி ஆதித்யநாத், அமித் ஷா

கட்சியின் உபி தேர்தல் பொறுப்பாளரும் தேசியப் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி, பல இலவசங்களை அறிவித்துள்ளார். பெண்களைக் குறிவைத்துப் பிரச்சாரம் செய்யும் இவர், அவர்களுக்கு மின்சார ஸ்கூட்டி, ஸ்மார்ட் போன், வருடத்தில் ஆறு சமையல் எரிவாயு உருளைகள் அளிப்பதாகக் கூறியுள்ளார். விவசாயத்திற்கு இலவசப் பாசன வசதி வழங்குவதாகவும், மின்சாரக் கட்டணத்தைப் பாதியாகக் குறைப்பதாகவும் பிரியங்கா உறுதி அளித்துள்ளார்.

இந்த மாநிலத்தின் சிறிய கட்சிகளும் இலவச அறிவிப்புகளை வெளியிட்டிருக்கின்றன. இலவசங்களை அறிவிக்காத ஒரே ஒரு கட்சி மாயாவதியின் பகுஜன் சமாஜ் மட்டும்தான். உபியில் மூன்று முறை ஆட்சி செய்த இக்கட்சி மட்டுமே தனது கொள்கை மற்றும் மாநில வளர்ச்சித் திட்டங்களை முன்னிறுத்தி உள்ளது.

உத்தர பிரதேசத்திலிருந்து பிரிந்த உத்தராகண்டிலும் இலவச அறிவிப்புகள் அதிகம். இங்கும் ஆளும் பாஜக மாணவ, மாணவிகளுக்கு கணினி டேப்ளட் விநியோகித்துள்ளது. இந்தத் தேர்தலில் வென்றால், இலவசமாகக் குடிநீர், மின்சாரம் அளிப்பதுடன் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று பாஜக உறுதி அளித்துள்ளது. இதேநிலை தான் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலிலும் இடம் பெற்றுள்ளது. இங்கு இலவசங்களை அறிமுகம் செய்து வைத்துள்ளது ஆம் ஆத்மி கட்சி.

அர்விந்த் கேஜ்ரிவால்

பஞ்சாபில் முக்கிய எதிர்க்கட்சியாக வளர்ந்துவிட்ட இக்கட்சியின் தேசிய அமைப்பாளரான அர்விந்த் கேஜ்ரிவால் இலவச அறிவிப்புகளை அள்ளி வீசியுள்ளார். ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால், அனைத்து பெண்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் செலவுத் தொகை, 300 யூனிட் வரையிலான இலவச மின்சாரம் என அறிவித்துள்ளார். இதையடுத்து இந்தச் சவாலை எதிர்கொள்ள, அம்மாநிலத்தின் ஆளுங்கட்சியான காங்கிரஸும் இலவச அறிவிப்புகளில் இறங்கியுள்ளது. மின்சாரக் கட்டணத்தில் தலா ஒரு யூனிட்டிற்கு 3 ரூபாய் குறைத்துள்ளார் அம்மாநில முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி.

பஞ்சாப் மாநிலக் காங்கிரஸ் தலைவரான நவ்ஜோத்சிங் சித்து அனைத்து பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய், கல்லூரி மாணவிகளுக்கு மின்சார ஸ்கூட்டி, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு 12,000 ரூபாய், 10-ம் வகுப்பினருக்கு 10,000 ரூபாய், 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண் குழந்தைகளுக்கு 5,000 ரூபாய் என அறிவித்துள்ளார்.

வாரி இறைக்கப்படும் மக்கள் வரிப்பணம்!

இந்த எண்ணிக்கை காங்கிரஸ் வெளியிடும் தேர்தல் அறிக்கையில் மேலும் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழம்பெரும் கட்சியாக காங்கிரஸ் தனது கொள்கைகள், மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை பற்றி எங்கும் பேசியதாகத் தெரியவில்லை. இது, தனது ஆட்சியைத் தக்கவைக்க மக்களின் வரிப்பணத்தை, மக்களுக்கே வாரி இறைக்க முடிவு செய்து விட்டதை காட்டுகிறது. இதனால், பொதுமக்களில் ஒரு பகுதியினர் மட்டுமே அதிகப் பலனடைகிறார்கள்.

அகாலியின் இலவச 400 யூனிட் மின்சாரம்

பஞ்சாபின் முன்னாள் ஆளும் கட்சியான சிரோமணி அகாலி தளமும் வேறுவழியின்றி இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வங்கி கடன் தள்ளுபடி செய்வதாக அக்கட்சி அறிவித்துள்ளது. 400 யூனிட் வரை இலவச மின்சாரம் அளிப்பதாகவும் உறுதி அளிக்கிறது. தனியார் மருத்துவமனைகளிலும் 13,000 ரூபாய் வரை இலவச சிகிச்சை, ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் 1,000 ரூபாய் என அடுக்குகிறது. நீலநிற ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பாசனம் செய்வதற்கான டீசலை பெற மாதம் 2,000 ரூபாய் ரொக்கமும் அளிக்க உள்ளது.

மம்தா பானர்ஜி

கோவாவில் திரிணமூல் காங்கிரஸ்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் கோவாவிலும் இந்தமுறை இலவசங்கள் அறிமுகமாகிவிட்டன. இங்கு ஆட்சி அமைப்பதில் தீவிரம் காட்டும் திரிணமூல் காங்கிரஸ், ஒவ்வொரு குடும்பப் பெண்களுக்கும் மாதம் 5,000 ரூபாய் அறிவித்துள்ளது. இதுதவிர பல்வேறு இலவசங்களை அக்கட்சித் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்திருக்கிறார். இவரால் அங்கு ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சிகளான காங்கிரஸும் இலவச அறிவிப்புகளுக்கு ஆளாகிவிட்டன.

மக்களவைத் தேர்தலிலும் இலவசங்கள்?

இந்த ஐந்து மாநிலங்களில் இலவச அறிவிப்புகள் இத்துடன் முடிந்து விடாது என எதிர்பார்க்கப்படுகிறது. இது அடுத்து வரும் மற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் நிச்சயமாக எதிரொலிக்கும். இதற்குக் கிடைக்கும் பலனைப் பொறுத்து அது 2024 மக்களவை தேர்தல் களத்திலும் எதிரொலித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை!

x