தேர்தலை 6 நாட்களுக்குத் தள்ளிவைக்க வேண்டும்: பஞ்சாப் முதல்வர் கோரிக்கை


பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி

117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல், பிப்ரவரி 14-ல் ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. இந்நிலையில், குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு தேர்தலை 6 நாட்களுக்குத் தள்ளிவைக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருக்கிறார் பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி.

இதுகுறித்து, தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷீல் சந்திராவுக்கு ஜனவரி 13-ம் தேதியிட்ட கடிதத்தை அவர் அனுப்பியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில், “பிப்ரவரி 16-ம் தேதி குரு ரவிதாஸின் பிறந்ததினம் கொண்டாடப்படுகிறது என பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

இதையொட்டி, பிப்ரவரி 10 முதல் 16-ம் தேதிவரை, ஏறத்தாழ 20 லட்சம் பக்தர்கள் உத்தர பிரதேசத்தின் வாராணசிக்குப் பயணம் மேற்கொள்வார்கள். இந்தச் சூழலில், பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த பலரால், பிப்ரவரி 14-ல் நடைபெறும் வாக்குப்பதிவில் பங்கேற்க முடியாது. வாக்களிப்பது அரசமைப்புச்சட்ட ரீதியிலான உரிமை ஆகும்” என்று சரண்ஜீத் சிங் சன்னி குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், “பிப்ரவரி 10 முதல் 16 வரை வாராணசிக்குச் செல்வதற்கு ஏதுவாக தேர்தல் வாக்குப்பதிவு தேதி நீட்டிக்கப்பட வேண்டும் எனப் பட்டியலினச் சமூகத்தினரின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். எனவே, பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை குறைந்தபட்சம் 6 நாட்களுக்குத் தள்ளிவைப்பது நியாயமானதும் பொருத்தமானதும் ஆகும். தேர்தலைத் தள்ளிவைப்பதன் மூலம் 20 லட்சம் பேர் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த வழிவகுக்க முடியும்” என்று அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னதாக, தேர்தலை பிப்ரவரி 20-ம் தேதிக்குத் தள்ளிவைக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் பஞ்சாப் மாநிலத் தலைவர் ஜஸ்வீர் சிங் கடி கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

x