156 கோடி தடுப்பூசிகளைக் கடந்த இந்தியா!


கரோனா தொற்றுக்கு எதிரான போரில் முக்கிய ஆயுதமாகக் கருதப்படுகிறது தடுப்பூசி. பல நாடுகளில் தடுப்பூசி கொள்முதல் தொடங்கி, விநியோகம், தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மக்களின் ஒத்துழைப்பின்மை எனப் பல்வேறு தடங்கல்கள் நிலவுகின்றன. இந்நிலையில், இந்தியாவில் 156 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன எனும் செய்தி முக்கியத்துவம் பெறுகிறது. நேற்று (ஜன.15) மட்டும் 57 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.

18 முதல் 44 வயதுள்ளவர்களுக்கு இதுவரை 52,40,53,061 தடுப்பூசிகள் முதல் தவணையாகச் செலுத்தப்பட்டிருக்கின்றன. இரண்டாவது தவணையாக 36,73,83,765 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன. அதேபோல, 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு 3,36,09,191 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன.

வெள்ளிக்கிழமை அன்று (ஜன.14) இந்தியாவில் 2.64 லட்சம் பேருக்குத் தொற்று உறுதியான நிலையில், நேற்று மட்டும் 2,68,833 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து, நாட்டில் கரோனா தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 3,68,50,962 ஆக அதிகரித்திருக்கிறது. ஒமைக்ரான் தொற்றுகளின் எண்ணிக்கை 6,041 ஆக அதிகரித்திருக்கிறது.

x