முதன்முதலாக சட்டப்பேரவைத் தேர்தலில் களம் காணும் யோகி!


முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், கோரக்பூர் (நகர்ப்புறம்) தொகுதியில் போட்டியிடும் முதல்வர் யோகி ஆதித்யநாத், அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

403 தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10 தொடங்கி 7 கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில், முதற்கட்டமாக, 107 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்திருக்கிறது பாஜக. அதில் கோரக்பூர் (நகர்ப்புறம்) தொகுதி வேட்பாளராக யோகி ஆதித்யநாத் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, பிரயாக்ராஜில் உள்ள சிரது தொகுதியில் போட்டியிடுகிறார்.

மார்ச் 3-ல் நடைபெறும் 6-வது கட்டத் தேர்தலில், கோரக்பூர் (நகர்ப்புறம்) தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. பாஜகவின் ராதா மோகன் தாஸ் அகர்வால் அந்தத் தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கிறார்.

கோரக்பூர் (நகர்ப்புறம்) தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் முதன்முதலாகச் செய்தியாளர்களைச் சந்தித்த யோகி, “இந்தத் தேர்தலில் கோரக்பூர் (நகர்ப்புறம்) தொகுதியில் போட்டியிட என்னைத் தேர்வு செய்த பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக நாடாளுமன்றக் குழுவினர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.

மேலும், “கட்சித் தொண்டர்கள், இந்நாள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோரின் துணையுடன், கோரக்பூரில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மாநிலத்திலும் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் வென்று மீண்டும் ஆட்சியமைக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் 4 முறை வென்று எம்பியாக இருந்த யோகி, முதன்முறையாகப் போட்டியிடும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் இதுதான். 2017 சட்டப்பேரவைத் தேர்தலின்போது முதல்வர் முகமாக யாரையும் பாஜக முன்னிறுத்தவில்லை. பிரதமர் மோடியின் பெயரால்தான் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் அவர் மேற்கொண்ட பிரச்சாரக் கூட்டங்கள், பாஜகவுக்கு வெற்றியை தேடித் தந்தன.

தேர்தல் வெற்றிக்குப் பின்னர்தான், கட்சித் தலைமையால் யோகி ஆதித்யநாத் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு மோடி - அமித் ஷா என இருவரின் ஆதரவும் கிடைத்தது. உத்தர பிரதேச சட்டமேலவை உறுப்பினராகப் பதவியேற்றுதான் அவர் முதல்வரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

x