நடக்கிறார், பேசுகிறார்... கரோனா தடுப்பூசி போட்டவருக்கு நடந்த அற்புதம்!


துலார்சந்த் முண்டா

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பக்கவாதத்தால் நடக்க முடியாத மற்றும் பேசும்திறனை இழந்த ஒருவர், கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி போட்ட மறுநாளே நடக்கவும், பேசவும் கூடிய திறனைப்பெற்ற அற்புத சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதை உறுதிப்படுத்திய மருத்துவர்கள், இதுகுறித்து ஆராய 3 பேர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோவின் சால்கதி கிராமத்தைச் சேர்ந்த 55 வயதுடைய துலார்சந்த் முண்டா என்பவர், 4 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் சிக்கி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இதனால் படுத்த படுக்கையான முண்டா தனது பேசும்திறனையும் இழந்துபோனார்.

இந்நிலையில், கடந்த ஜனவரி 4-ம் தேதி முண்டாவுக்கு கோவிஷீ்ல்டு கரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டது. தடுப்பூசி போட்ட மறுநாளே நடக்கவும், பேசவும் கூடிய திறனை பெற்றுள்ளார் முண்டா. இந்த அற்புத சம்பவத்தை மருத்துவர்களும் உறுதி செய்துள்ளனர்.

துலார்சந்த் முண்டா

பொக்காரோ நகரின் மருத்துவர் ஜிதேந்திர குமார் கூறும்போது, “இது தனக்குப் பெரிய ஆச்சரியத்தை அளிக்கிறது. 4 ஆண்டு கால வாதத்தில் இருந்து ஒரே ஒரு தடுப்பூசியால் மீள்வது என்பது மிகுந்த வியப்பாக இருக்கிறது. சுகாதாரத் துறை அதிகாரிகளும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்” என கூறியுள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு துலார்சந்த் முண்டா அளித்தப் பேட்டியில், “நான் ஜனவரி 4-ம் தேதி கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். அதன் பின்னர் எனது கால்களை அசைக்க முடிந்தது. நான் நிற்கிறேன், நடக்கிறேன். என்னால் பேசவும் முடிகிறது” என்றார் மகிழ்ச்சியுடன்.

துலார் சந்தின் குடும்பத்தினர் இதுவரை ரூ.4 லட்சம் செலவழித்து அவரை சீர்படுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால், திடீரென்று அவருக்கு குணமானது கிராமத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே, இது குறித்து ஆராய 3 பேர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

x