டெல்லிக்கு வழங்க எங்களிடம் உபரி நீர் இல்லை: உச்ச நீதிமன்றத்தில் இமாச்சல் அரசு தகவல்


புதுடெல்லி: டெல்லியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இது தொடர்பாக டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘இமாச்சல பிரதேசஅரசு 136 கன அடி உபரி நீரை டெல்லிக்கு திறந்து விட தயாராக உள்ளது. அந்த நீர் ஹரியாணா வழியாக டெல்லியை வந்தடைய ஹரியாணா அரசு உதவ வேண்டும்" என கடந்த 6-ம் தேதி உத்தரவிட்டது.

இந்த மனு நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஷ்ரா மற்றும் பிரசன்னா பி.வராலே அடங்கிய விடுமுறை கால அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இமாச்சல் அரசு சார்பில்ஆஜரான வழக்கறிஞர், “டெல்லிக்கு வழங்க எங்களிடம் 136 கனஅடி உபரி நீர் இல்லை. இது தொடர்பாக நாங்கள் ஏற்கெனவே கொடுத்த உறுதிமொழியை திரும்பப் பெறுகிறோம்" என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் கூறும்போது, “யமுனா நதி நீரை மாநிலங்கள் பகிர்ந்து கொள்ளும் விவகாரம் மிகவும் சிக்கலானது. எனவே, யமுனா நதி நீர்பங்கீடு தொடர்பாக 1994-ம் ஆண்டுமேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, அமைக்கப்பட்டுள்ள அப்பர் யமுனா நதிவாரியம்தான் (யுஒய்ஆர்பி) இந்தப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

தண்ணீர் தேவை குறித்த மனுவை சமர்ப்பிக்குமாறு யுஒய்ஆர்பி ஏற்கெனவே டெல்லி அரசை கேட்டுக் கொண்டுள்ளது. எனவே, மனுவை டெல்லி அரசு இன்று (நேற்று) 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். வாரியம் வெள்ளிக்கிழமை கூடி இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும்" என்றனர்.

x