பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகும் ராம் வீர் உபாத்யாய: பின்னணி என்ன?


உத்தர பிரதேச அரசியலில் சாதி / மத அடிப்படையிலான அணிதிரட்டல்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. தேர்தல் நெருங்கும் சமயத்தில் அது பகிரங்கமாகவே வெளிப்படும். 403 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட அம்மாநிலத்தில், பிப்ரவரி 10 முதல் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடக்கவிருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், கட்சி மாறும் காட்சிகள் அநேகமாக எல்லாக் கட்சிகளிலும் பார்க்க முடிகிறது. சாதி அடிப்படையில் முக்கியத்துவம் கொண்ட தலைவர்கள் கட்சியிலிருந்து விலகுவது பாஜக உட்பட எல்லாக் கட்சிகளிலும் தொடர்கதையாகிவிட்டது. அந்த வகையில் பகுஜன் சமாஜ் கட்சியின் பிராமண முகங்களில் ஒருவராக இருந்த ராம்வீர் உபாத்யாய அக்கட்சியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்திருக்கிறார்.

கடந்த 25 ஆண்டுகளாக பகுஜன் சமாஜ் கட்சியில் அங்கம் வகித்துவந்த அவர், நான்கு முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர். சாதாபாத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான அவர், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் அரசில் மின்சாரத் துறை அமைச்சராகப் பதவிவகித்தவர்.

2009 மற்றும் 2014 மக்களவைத் தேர்தல்களிலும், 2012 மற்றும் 2017 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் கிடைத்த தோல்விகளுக்குப் பிறகும் கட்சியில் எந்த சுயபரிசோதனையும் நடக்கவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரான மாயாவதிக்கு எழுதியிருக்கும் ராஜினாமா கடிதத்தில் ராம்வீர் உபாத்யாய் கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாகப் பல முறை தொடர்ந்து தனது கருத்துகளை முன்வைத்து வந்ததாக அக்கடிதத்தில் கூறியிருக்கும் அவர், “2019 மக்களவைத் தேர்தலில் எதிர்பார்த்த அளவுக்கு நமக்கு வெற்றி கிடைக்காது என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தேன். நமது ஆதரவு வாக்குகளைக் கூட நாம் இழந்துவிட்டோம்” என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார். கன்ஷிராமின் கொள்கைகளிலிருந்து பகுஜன் சமாஜ் கட்சி திசை திரும்பிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

“நேர்மையானவர்களுக்குக் கட்சியில் இடமில்லை. கட்சித் தலைவர் மாயாவதி தொடர்புகொள்ள முடியாதவராக, தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறார்” என்றும் அவர் விமர்சித்திருக்கிறார்.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி

அதேவேளையில், ஏற்கெனவே கட்சி விரோத நடவடிக்கைகள் காரணமாக அவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2019 மக்களவைத் தேர்தலின்போது மாற்றுக்கட்சி வேட்பாளர்களுக்குப் பகிரங்கமாகவே ஆதரவாகச் செயல்பட்டார் என அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ராம் வீர் உபாத்யாயவின் உறவினர்கள் கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தனர். இப்போது அவரும் பாஜகவில் சேர்வார் என்றும், சாதாபாத் தொகுதி பாஜக வேட்பாளராக அவர் முன்னிறுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அம்மாநிலத்தில் முன்னேறிய வகுப்பினர் 13 சதவீதம். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரும் பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளருமான சதீஷ் சந்திர மிஸ்ரா உள்ளிட்டோர் முன்னேறிய வகுப்பினரையும், பட்டியல் சமூகத்தினரையும் அணிதிரட்டும் பணிகளில் அவர் இறங்கியிருக்கிறார்கள். சதீஷ் சந்திர மிஸ்ரா பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிராமணர் மாநாடுகளையும் நடத்திவருகிறார். இந்தச் சூழலில் ராம் வீர் உபாத்யாய விலகுவது முன்னேறிய சமூகத்தினரின் ஆதரவைப் பெறுவதில் பகுஜன் சமாஜ் கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது.

2017 சட்டப்பேரவைத் தேர்தலில் 19 இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சி வென்றது. எனினும், 11 எம்எல்ஏ-க்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார்கள். இதனால், உத்தர பிரதேச சட்டப்பேரவையில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களையே கொண்டிருக்கிறது பகுஜன் சமாஜ் கட்சி.

x