பஞ்சாப்: ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மானா?


ஆஆக மக்களவை உறுப்பினர் பகவந்த் மான்

117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல், பிப்ரவரி 14-ல் ஒரே கட்டமாக நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற ஆம் ஆத்மி கட்சி பகீரத முயற்சிகளில் இறங்கியிருக்கிறது. இந்நிலையில், அக்கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக மக்களவை உறுப்பினர் பகவந்த் மான் முன்னிறுத்தப்படலாம் எனத் தெரிகிறது.

ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக ஒரு சீக்கியர்தான் முன்னிறுத்தப்படுவார் என அரவிந்த் கேஜ்ரிவால் உறுதியாகக் கூறியிருந்தார். ஆனால், அந்த சீக்கிய முகம் யார் என்பது இதுவரை முடிவாகவில்லை. ஆம் ஆத்மி கட்சி எம்.பியான பகவந்த் மான், எதிர்க்கட்சித் தலைவர் ஹர்பால் சிங் சீமா போன்றோரின் பெயர்கள் அடிபடுகின்றன. எனினும், யாருடைய பெயரையும் கேஜ்ரிவால் பரிந்துரைக்கவில்லை. இப்போது முதல் முறையாக பகவந்த மானின் பெயரை அவர் சூசகமாக முன்வைத்திருக்கிறார்.

பஞ்சாப் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “அது குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்படும்” என்று கேஜ்ரிவால் சொல்லியிருந்தார்.

இந்தச் சூழலில், இன்று (ஜன.13) சண்டிகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அர்விந்த் கேஜ்ரிவால், “பகவந்த் மான் என் அன்புக்குரியவர். அவர் என் தம்பியைப் போன்றவர். கட்சியின் உயர்ந்த தலைவர்” என்று நெகிழ்ந்து பேசினார்.

அத்துடன், “ஒரு தனிப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பேசும்போது, பகவந்த் மான் தான் முதல்வர் முகமாக முன்னிறுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தேன். அப்போது, இது குறித்து பஞ்சாப் மக்களிடம்தான் நாம் கேட்க வேண்டும் என்றும், முதல்வர் வேட்பாளர் குறித்து, மூடிய அறைக்குள் அமர்ந்து இருந்து முடிவெடுக்கும் பழக்கத்துக்கு முடிவுகட்ட வேண்டும் என்றும் பகவந்த் மான் கூறினார்” என்று குறிப்பிட்டார் கேஜ்ரிவால்.

அதேவேளையில், ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்பட வேண்டும் என்பது குறித்து பஞ்சாப் மக்கள் அலைபேசி மூலம் தங்கள் கருத்தைச் சொல்லலாம் என்று கூறி அதற்கான எண்ணையும் வெளியிட்டிருக்கிறார் கேஜ்ரிவால்.

ஜனவரி 17 மாலை 5 மணி முதல் அந்த எண்ணுக்குக் குறுஞ்செய்தி, வாட்ஸ்-அப் தகவல் அல்லது குரல் பதிவு ஆகியவற்றின் மூலம் முதல்வர் வேட்பாளர் குறித்து கருத்து தெரிவிக்கலாம் என்று கூறிய கேஜ்ரிவால், “சுதந்திர இந்தியாவில், முதல்வர் வேட்பாளர் என யார் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனும் விருப்பத்தை மக்களிடமே விட்டுவிடுவது இதுவே முதல் முறை” என்றும் குறிப்பிட்டார்.

பகவந்த் மானுக்குப் பதிலாக வேறு யாரையேனும் மக்கள் தேர்ந்தெடுத்தால் என்ன முடிவெடுக்கப்படும் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, “பகவந்த மானே அந்த வேட்பாளரை முன்னிறுத்துவார்” என்று பதிலளித்தார் கேஜ்ரிவால்.

ஒருவேளை ஆம் ஆத்மி கட்சிக்கு வெளியே உள்ள ஒருவரை மக்கள் தேர்ந்தெடுத்தால் என்ன செய்வீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “பஞ்சாப் மக்கள் மீது நம்பிக்கை வையுங்கள். ஜனவரி 17 வரை காத்திருங்கள்” என்றார். பஞ்சாப் முதல்வர் ரேஸில் நீங்களும் இருக்கிறீர்களா என செய்தியாளர்கள் கேட்டபோது, “எல்லோரும் இப்படித்தான் நினைப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். நான் அந்தப் பந்தயத்திலேயே இல்லை” என்றார் புன்சிரிப்புடன்!

x