அகன்ற உடலமைப்பு கொண்ட விமானங்கள் அதிகரிக்கப்படும்!


குறுகலான உடலமைப்பு கொண்ட ஏ320 விமானங்களை ஒப்பிட, அகன்ற உடலமைப்பு கொண்ட ஏ350 போன்ற விமானங்கள் பெரிய அளவிலான எரிபொருள் டேங்குகளைக் கொண்டவை. அதிக எண்ணிக்கையிலான இருக்கைகளைக் கொண்டிருக்கும் இந்த விமானங்கள் அதிகத் தொலைவு பறக்கக்கூடியவை.

இந்நிலையில், இந்தியாவில் அகன்ற உடலமைப்பு கொண்ட விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து, இந்திய விமான நிறுவனங்களின் தலைவர்களுடன் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இன்று (ஜன.13) ஆலோசனை நடத்தினார். காணொலி வாயிலாக நடந்த இந்தக் கூட்டத்தில், இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரோனோஜாய் தத்தா, ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அஜய் சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதுதொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருக்கும் ஜோதிராதித்ய சிந்தியா, “ஒழுங்குமுறைகள் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பது குறித்த ஆலோசனைகளுடன், அகன்ற உடலமைப்பு கொண்ட விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது முதல், இந்தியாவை சர்வதேச விமானப் போக்குவரத்து மையமாக உருவாக்குவது, விமானங்களைக் குத்தகைக்கு விடுவது வரை பல்வேறு விஷயங்கள் குறித்து விமானப் போக்குவரத்து ஆலோசனைக் குழுக்களுடன் ஆலோசிக்கப்பட்டது” என்று தெரிவித்திருக்கிறார்.

விமானப் போக்குவரத் துறையை மீண்டும் ஆரோக்கியமானதாக மாற்றவும், வளர்ச்சியை அதிகரிக்கவும் உறுதிபூண்டிருக்கிறோம் என்றும் ஜோதிராதித்ய சிந்தியா கூறியிருக்கிறார்.

x