“மோசமான அந்தச் சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம்” - ஸ்வாதி மலிவால்


ஸ்வாதி மலிவால் | கோப்புப்படம்

புதுடெல்லி: “எனக்கு நடந்தது மிகவும் மோசமான சம்பவம், ஆனால், அதை அரசியலாக்க வேண்டாம் என பாஜகவை கேட்டுக் கொள்கிறேன்.” என்று ஆம் ஆத்மி கட்சி பெண் எம்.பி. ஸ்வாதி மலிவால் தெரிவித்துள்ளார். டெல்லி முதல்வரின் உதவியாளர் தன்னை தாக்கிய புகார் குறித்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை பேசாத ஸ்வாதி மலிவால், தனது எக்ஸ் பக்கத்தில் முதல்முறையாக இதுதொடர்பாக பேசியுள்ளார். அவரது பதிவில், "எனக்கு நடந்தது மிகவும் மோசமானது. சம்பவம் தொடர்பாக போலீஸில் வாக்குமூலம் கொடுத்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன். கடந்த சில நாட்களாகவே எனக்கு சிரமமான நாட்களாக அமைந்தது. எனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு எனது நன்றி.

எனது பிம்பத்தைக் கெடுக்க முயல்பவர்களையும் கடவுள் மகிழ்ச்சியாக வைத்திருக்கட்டும். நமது நாட்டில் முக்கியமான தேர்தல் நடக்கிறது. தற்போது ஸ்வாதி மாலிவால் முக்கியமில்லை. நாட்டின் பிரச்சினைகளே முக்கியம். பாஜகவினருக்கு ஒரு சிறப்பு வேண்டுகோள் உள்ளது. எனக்கு நடந்த சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவியும், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான ஸ்வாதி மலிவால், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இல்லத்தில் அவரது உதவியாளரால் தாக்கப்பட்டதாக போலீஸில் புகார் அளித்துள்ளார். சில தினங்கள் முன் டெல்லி காவல் துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட ஸ்வாதி மலிவால், டெல்லி முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் கேஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளரால் தாம் தாக்கப்பட்டதாக புகார் கூறினார்.

இதையடுத்து டெல்லி போலீஸார் முதல்வர் கேஜ்ரிவால் வீட்டுக்குச் சென்றனர். சிறிது நேரத்தில் டெல்லி சிவில் லைன்ஸ் பகுதி காவல் நிலையத்துக்கு ஸ்வாதி மலிவால் வந்தார். பின்னர் போலீஸில் புகார் அளித்தார். இந்த சம்பவம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x