பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டவர்களில் 90% பேரின் உடலில் ஒமைக்ரான், டெல்டா திரிபுகளுக்கு எதிரான எதிரணுக்கள்!


இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு ஆறு மாதங்களுக்குப் பின்னர் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோரின் உடலில் நன்னிலைப்படுத்தும் எதிரணுக்கள் (neutralising antibodies) உருவாவதாக கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் கூறியிருக்கிறது. உடலில் கிருமி நுழைந்தவுடன் உடனடியாகச் செயலாற்றுவது இந்த எதிரணுக்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், டெல்டா, ஒமைக்ரான் திரிபுகளையும் எதிர்க்கும் திறன் கொண்ட நன்னிலைப்படுத்தும் எதிரணுக்களை உருவாக்கும் ஆற்றல் கோவாக்சின் பூஸ்டர் டோஸுக்கு இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவின் எமோரி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் மூலம் இது தெரியவந்திருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்வது பாதுகாப்பானது என்றும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது என்று ஏற்கெனவே பாரத் பயோடெக் நிறுவனம் கூறியிருந்தது. பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்ட பின்னர், ஒரே மாதிரியான தன்மை கொண்ட மற்றும் மாறுபட்ட தன்மை கொண்ட சார்ஸ் கரோனா வைரஸ் - 2 திரிபுகளுக்கு எதிரான எதிரணுக்களின் அளவு 19-லிருந்து 265 மடங்காக அதிகரித்திருப்பதாக அந்நிறுவனம் கூறியிருந்தது.

இதற்கிடையே, சாதாரண சளியைப் போன்றதுதான் ஒமைக்ரான் தொற்று என்று மருத்துவ நிபுணர்கள் சிலர் கூறிவந்த நிலையில், அதை மறுத்திருக்கும் மத்திய அரசு ஒமைக்ரானை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.

“நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். கரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்றுங்கள். தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள். கோவிட் பெருந்தொற்றுக்கு எதிரான நடவடிக்கையில் தடுப்பூசி ஒரு முக்கியமான தூண் ஆகும்” என்று நிதி ஆயோக்கில் முழு நேர உறுப்பினராக அங்கம் வகிக்கும் சுகாதார நிபுணரான வி.கே.பால் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

x