புதுடெல்லி: பணவீக்கத்தை குறைக்க பிரதமர் மோடி எந்தவிதமான உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெளியிட்ட தரவுகளின்படி, உணவுப் பணவீக்கம் ஏப்ரலில் 8.70 சதவீதமாகவும், மே மாதத்தில் 8.69 சதவீதமாகவும் இருந்தது. நான்கு மாதங்களாக உணவுப் பொருட்களின் விலை .5 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. பருப்பு வகைகள் 10 சதவீதம் விலை அதிகரிப்புடன் ஓராண்டை நிறைவு செய்துள்ளது. மே மாதத்தில் உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் 17.14 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த நெருக்கடியான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பிரதமர் மோடி எந்தவிதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
பருப்பு விலை உயர்வுக்கு இரண்டு தீர்வுகளை முன்வைத்தோம். அதில் ஒன்று, சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரையின்படி, பருப்புகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிப்பது. இதனை அரசு நிறைவேற்றும்போது, விவசாயிகள் உள்நாட்டில் பருப்பு வகைகளை அதிகம் பயிரிடுவர். இந்த ஊக்குவிப்பு நடவடிக்கையின் மூலம் உள்நாட்டில் பருப்பு வகைகளின் விலை கட்டுக்குள் வரும். தற்போது பருப்புக்கான உறுதியான சந்தை மற்றும் விலை உள்ளது.
அதேபோன்று, பருப்பு வகைகளை பொது விநியோகத் திட்டத்தில் சேர்க்கவும், ஏழைகளின் புரத உட்கொள்ளலை அதிகரிக்கவும், அவர்களை பணவீக்கத்திலிருந்து காப்பாற்றவும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது. ஆனால், இதற்கும் பிரதமரிடமிருந்து எந்தவிதமான பதிலும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.